முகப்பு
தமிழ்நாடு

பருவ மழை பொய்த்தது: நெல்லை மாவட்டத்தில் வறண்டு வரும் அணைகள்!

பருவ மழை பொய்த்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்த

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருநெல்வேலி: பருவ மழை பொய்த்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்த கொள்ளளவை கொண்ட கொடுமுடியாறு, நம்பியாறு, வடக்குப்பச்சையாறு அணைகள் வறண்டு வருகின்றன.

நிகழ் கார் பருவத்தில் தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 16 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. 2015 இல் 20 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை கை கொடுக்காததால் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

வளமையான மழை அளவைவிட இப்பருவத்தில் 27 சதவீதம் மழை குறைந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை மட்டுமே நிரம்பியது. பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியை கூட நெருங்கவில்லை.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் அணையின் மூலம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணைகளில் இருந்து சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் திறக்கப்படாத நிலையில் சாகுபடி பரப்பு 20 சதவீதம் குறைந்துள்ளது.

இதனிடையே வடக்குப்பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் வறண்டு வருகின்றன. புதன்கிழமை நிலவரப்படி, 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 9.25 அடியாகவும், 52.50 அடி கொள்ளளவுள்ள

கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 14.50 அடியாகவும், 23 கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.76 அடியாகவும் இருந்தது.
இந்த அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் அப்பகுதியில் குளங்களிலிருந்து கிடைத்த நீரை கொண்டு நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் கிடைக்காத சூழலில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் கருகின.

பிற அணைகளில்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 43.75 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 57.72 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 57.62 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 29.12 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.77 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 42.75 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 299.76 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 9 கனஅடி, கடனாநதி அணைக்கு 32 கனஅடி, ராமநதி அணைக்கு 18 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 5 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
குடிநீர், பாசனத் தேவைக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 804.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்துக்கு 45 கனஅடி, கடனாநதி அணையில் 45 கனஅடி, ராமநதி அணையில் 30 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 20 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →