திருச்சி: மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலுள்ள நன்செய் நிலங்களில் நெல் சாகுபடிக்கு தயார் செய்து நாற்று நடுவதற்குப் பதிலாக, நன்செய் புழுதியில் நேரடி நெல் விதைப்பு செய்து சம்பா சாகுபடியை மேற்கொள்ளலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறியது:
ஆற்று நீர்வரத்து காலதாமதம் ஆகும் காலத்திலும் எதிர்பார்த்த பருவமழை கிடைக்காத தருணத்திலும் வயலை புழுதியாக தயார் செய்து, நெல் விதைகளை நேரடியாக விதைப்பு செய்து பின்னர் ஆற்றுப்பாசனத்தில் நீர்வரத்து கிடைத்தவுடன் சேற்று நெல்லாக மாற்றி சாகுபடி செய்ய வேண்டும்.
வயலைத் தயார் செய்வதற்கு கோடை உழவு அவசியம். மழை பெய்த பின்னர் 2 அல்லது 3 முறை நிலத்தை உழுது புழுதியாக்கி கொள்ள வேண்டும். கடைசி உழவினை ரோட்டவேட்டர் கொண்டு உழுது பின்னர் நேரடி விதைப்பு செய்ய வேண்டும். நன்கு உழுவதினால் நீர்பிடிக்கும் தன்மை அதிகரிக்கிறது. மண் பக்குவப்பட்டு களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பூச்சிகளின் கூண்டுபுழுக்கள், நோய்களின் வித்துக்கள் அழிக்கப்படுகின்றன. மண் இறுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம் இட்டு கடைசி உழவு செய்யப்பட வேண்டும்.
செப்டம்பர் 15-ம் தேதி வரை விதைப்பு செய்வதற்கு மத்திய கால ரகங்களான ஏடிடீ, கோ 43, கோஆர் 50, டிஆர்ஒய்-3 ஆகியவற்றையும், செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு குறுகியகால ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 45 ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
நேரடி நெல் விதைப்பிற்கு ஒரு ஏக்கருக்கு 40 கிலோ சான்று பெற்ற விதைகள் தேவைப்படும். விதைகளை ஒரு சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் (ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பொட்டாஷ் என்ற அளவில் கலந்து) 10-12 மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். விதைப்பதற்கு முன்பாக பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் மற்றும் எதிர் உயிர் பாக்டீரியா சூடோமோனாஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கவும்.
விதைப்பு: நிலத்தை நன்கு உழுது புழுதியாக்கி கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை கைதெளிப்பாகவோ அல்லது விதைக்கும் கருவியை கொண்டு ஒரு அங்குல ஆழத்தில் விதைக்கலாம். நெல் விதைகளை விதைக்கும் கருவி கொண்டு விதைப்பதால் தகுந்த பயிர் இடைவெளியும் பயிர் எண்ணிக்கையும் பராமரிக்கப்படுகிறது.
பின்செய் நேர்த்தி: வயலில் முதல் மழை வந்தவுடன் 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (800 கிராம்), 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா (800 கிட்ரம்) ஆகியவற்றை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும் வயலில் நன்கு ஈரம் உள்ள சமயத்தில் பயிர் களைவதும் பயிர் இல்லாத இடங்களில் பாடு நிரப்பலும் விதை முளைத்த 14 முதல் 21 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். வறட்சியான சமயங்களில் நீரின் தேவையை குறைக்க 1 சத பொட்டாஷ் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
களை மேலாண்மை: முதல் களை பயிர் முளைத்த 15 முதல் 21 நாட்களிலும் இரண்டாவது களை 30-45 நாட்களிலும் எடுக்க வேண்டும். தேவையான களைக்கொல்லி மருந்துகளைப் பயன்படுóத்திட வேண்டும்.
உர மேலாண்மை: விதைப்பதற்கு முன்பு கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்தை இட வேண்டும் அல்லது ஏக்கருக்கு 300 கிலோ மக்கிய தொழு உரத்துடன் நெல்லுக்கு பரிந்துரை செய்யப்படும் 20 கிலோ மணிச்சத்தினை 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் வடிவில் தொழு உரத்துடன் கலந்து நிழலான இடத்தில் போதிய நீர் தெளித்து ஒரு மாத காலத்தில் ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி அடியுரமாக இட வேண்டும். நேரடி விதைப்பு செய்து புழுதிக்கால் நெல்லுக்கு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்தும், 20 கிலோ சாம்பல் சத்தும், 110 கிலோ யூரியாவும், 35 கிலோ பொட்டாஷ் உரமும் பரிந்துரைக்கப்படுகின்றன.
நீர் மேலாண்மை: ஆற்று நீர் வரத்தினை பொறுத்து நீர் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனமும் 2 அங்குல ஆழம் நீர் இருந்தால் போதுமானது.இவ்வாறு செய்தால் சம்பாவில் சாகுபடியை அதிக விளைச்சலுடன் பெறலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.