முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பல்கலை.யில் "ராகிங்' தடுப்புக்கு புதிய செயலி!

பல்கலைக்கழக வளாகத்தில் 'ராகிங்கை' தடுக்கவும், பல்கலைக்கழகம், மாணவர்கள் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ளவும்

Updated On : 16 செப்டம்பர், 2016 at 10:18 AM
பகிர்:

பல்கலைக்கழக வளாகத்தில் "ராகிங்கை' தடுக்கவும், பல்கலைக்கழகம், மாணவர்கள் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ளவும் புதிய செல்லிடப்பேசி செயலியை (ஆண்ட்ராய்ட்அப்ளிகேஷன்) அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிணி அறிவியல் துறை உருவாக்கி வருகிறது.

மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மிகுந்த பயனுள்ள இந்தச் செயலியை பல்கலைக்கழகம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.

முதலில் தொலைபேசியும், அடுத்து தகவல் தொழில்நுட்பமும் பரந்து விரிந்த உலகை வெகுவாகச் சுருக்கிவிட்டன என்றால், செல்லிடப்பேசி (ஸ்மார்ட் ஃபோன்கள்) உலகை கையடக்கத்தில் கொண்டு வந்துவிட்டது. வீட்டிலிருந்தபடியே உணவுப் பொருள்கள், உடைகள், பிற வீட்டு உபயோகப் பொருள்கள், பணப் பரிமாற்றம், பயணச் சீட்டுகள் முன்பதிவு என அனைத்தையும் செல்லிடப்பேசி மூலமே செய்துவிட முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஒரு மாணவர் எந்தப் பிரிவில் படிக்கிறார், எந்த ஆண்டு படிக்கிறார், தேர்வில் எத்தனை "அரியர்' வைத்திருக்கிறார் என அவரைப் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துகொள்ளவும், பல்கலைக்கழக வளாகம் குறித்த முழு விவரம், "ராகிங்' குறித்து யார் யாரிடம் புகார் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய செயலியை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினரும், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வருமான (டீன்) நாராயணசாமி ஆகியோர் கூறியதாவது:

மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி இந்தப் புதிய செயலி உருவாக்கப்படுகிறது. இது "ஆண்ட்ராய்ட்' செயலியாகும்.

இதைத் திறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) பதிவிறக்கம் செய்துகொண்டால் போதும். அதன்மூலம், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி வளாகத்தில் "ராகிங்' நடைபெற்றால் யாரிடம் புகார் தெரிவிப்பது,

அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும். அதோடு, அதன் மூலமாகவே புகாரும் தெரிவிக்கலாம். மேலும், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுக்கு எப்படிச் செல்வது என்பதை இந்தச் செயலியில் இடம் பெற்றிருக்கும் வரைபடம் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி, முக்கியமாக அனைத்து மாணவர்கள் குறித்த முழு விவரங்களையும் இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக, பெற்றோர் வீட்டிலிருந்தபடியே தங்களது மகன் அல்லது மகள் பல்கலைக்கழகத் தேர்வில் எத்தனை "அரியர்' வைத்திருக்கிறார், அவர் பெற்ற மதிப்பெண்கள், வகுப்புக்கு செல்கிறாரா என்பன உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும், மாணவரின் வயது, எந்தத் துறையில், எந்த ஆண்டில் படிக்கிறார் என்ற விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
விரைவில் இந்தச்செயலி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.