புதுச்சேரி: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரியும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள் முழுமையாக மூடப்பட்டதாலும், வாகனங்கள் ஓடாததாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
காவிரியில் நீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மேலும் தமிழக வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
புதுவையிலும் முழு அடைப்பு
இதன் தொடர்ச்சியாக புதுவையிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள், பல்வேறு கட்சிகள் தீர்மானித்தன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக, பாஜக, ஐஜேகே, பாமக, இடதுசாரிகள், வணிகர்கள் கூட்டமைப்பு, லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து புதுச்சேரி முழுவதும் மொத்தம் உள்ள 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. நகரின் முக்கிய கடை வீதியான நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட், அண்ணா சாலை, காந்தி வீதி, முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, வில்லியனூர், பாகூர், காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான இடங்களில் பரபப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
வாகனங்கள் ஓடவில்லை
இதே போல் புதுச்சேரியில் பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பிஆர்டிசி பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
தனியார் பள்ளிகள் விடுமுறை
புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் அரசுப் பள்ளிகள் இயங்கின. வாகனங்கள் இயங்காததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளிலும் காலை, மதியம் என 2 படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
முழு அடைப்பு போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க டிஜிபி சுனில்குமார் கொதம் உத்தரவின்படி 1000-க்கு மேற்பட்ட போலீஸார் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.