தமிழ்நாடு

விதிகளை மீறி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியது ஏன்? டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தினமணி

புது தில்லி: எதிர்வரும் ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை விதிகளை மீறி பயன்படுத்தியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம், சுட்டுரை, முகநூல் ஆகியவற்றில் தேர்தல் ஆணைய உத்தரவுக்கு முரணாக அதிமுக என்ற பெயரையும், அக்கட்சிக்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தி வருவதாக அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணி வேட்பாளர் மதுசூதனன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அதன் முதன்மைச் செயலாளர் தபஸ் குமார் மூலம் டிடிவி தினகரனுக்கு, திங்கள்கிழமை இரவு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டதால், கட்சியான "அதிமுக' என்ற பெயரையும், அதன் "இரட்டை இலை' சின்னத்தையும் பயன்படுத்தக்கூடாது என கடந்த 16-ஆம் தேதி உத்தரவிட்டு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்நிலையில் அதிமுக "அம்மா' அணியைச் சேர்ந்த உங்களுக்கு "தொப்பி' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகும் அதிகாரப்பூர்வ இணையதளம், சுட்டுரை, முகநூல் ஆகியவற்றில் முடக்கப்பட்ட இரட்டைச் இலைச் சின்னமும், உங்களது கட்சியின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் வாக்காளர்களை குழப்புவதும், தவறான தகவல்களை அவர்களிடையே பரப்புவதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (3)-இன்படி விதி மீறலாகும். இது தேர்தல் குற்றமாகும். மேலும, இந்திய தண்டனை சட்டப்படியும் குற்றமாகும். எனவே, அதிமுக என்ற கட்சியின் பெயர், நாளிதழ், தொலைக்காட்சி, இணைய ஊடகம் (சுட்டுரை, முகநூல், இணையதளங்கள்) போன்றவற்றில் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த செயலுக்காக தொடர்பாக உங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு தருகிறது. அதன்படி, உங்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து வரும் 6-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT