ஈரானில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று சென்னை வருகை
ஈரானில் சிறைபிடிக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் இன்று இரவு சென்னை வந்தடைகின்றனர்.
ஈரானில் சிறைபிடிக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் இன்று இரவு சென்னை வந்தடைகின்றனர்.
இதுகுறித்து, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் பி. ஜஸ்டின் ஆன்றணி தெரிவித்திருப்பதாவது:
தமிழக மீனவர்கள் 15 பேர் பஹ்ரைன் நாட்டு நிறுவனத்தில் மீன்பிடி தொழில் செய்துவந்தனர். இவர்கள், கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் நாட்டு கடற்படையால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்ததுடன், ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், மீனவர்கள் 15 பேரும் இரு தினங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டு, பஹ்ரைன் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடைகிறார்கள் என தகவல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.