தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடக்கும்.. ஆனா நடக்காது! மாற்றி யோசிக்கிறாரா டிடிவி?

DIN


சென்னை : சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற அளவுக்கு பண நடமாட்டம் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதியில் 12ம் தேதி வாக்குப்பதிவும், 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

தற்போது ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நடந்த அரசியல் சம்பவங்கள் அனைத்தையும், வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்த்துவந்தவர்கள்,  தற்போது களத்தில் இறங்கி விளையாடும் நேரம் வந்துள்ளது.

இந்த விளையாட்டு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், பொதுமக்களை தங்கள்அணிக்காக விளையாட வைக்க அதிமுகவில் இருந்து பிரிந்த ஒரு முக்கியக் கட்சி பெரிய அளவில் பணத்தை செலவழித்து வருகிறது. சில பல லட்சங்கள் என்றால் பரவாயில்லை.. பல கோடிகளை லாரிகளில் வந்து இறக்கியது போல ஆர்.கே.நகர் தொகுதியே செல்வ செழிப்போடு இருக்கிறது.

இதில் ஒரு சந்தேகமும் ஏற்படுகிறது. என்னவென்றால், புதிய சொகுசு ரக கார்களில் வந்து, தொப்பிகள், உணவு பொருட்கள் என வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கும் டிடிவி தினகரன் தரப்பு இப்படி வெளிப்படையாக கொடுப்பது சிலருக்கு மட்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் அரசியல் தெரியாதவர், நெளிவு சுளிவு தெரியவில்லை என்றெல்லாம் சிலர் சொன்னாலும், எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்துக்கு ஆளாகி, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கும் வரை சென்றாலும் அதில் ஏதோ ஒன்று உருத்துகிறது. அது என்ன என்று கடைசியில் சொல்கிறோம். {pagination-pagination}

பிரசாரத்துக்கு இடையே ஒரு அரசியல் விளையாட்டு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல், தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக பார்க்கப்படுவதால் அம்மாவின் அடுத்த அரசியல் வாரிசு தாங்கள்தான் என்பதை நிரூபிக்க டிடிவியும் ஓபிஎஸ்ஸும் கடுமையாக முயன்று வருகிறார்கள்.

ஆனால், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவுக்கு எதிர்காலமே இல்லை என்பதை நிரூபித்துவிட வேண்டும் என திமுக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

இதெல்லாம் வெளிப்படையாக நடந்தாலும்,  அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று விடவே கூடாது என்பதற்காக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களும், தமிழக அரசில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் மந்திரிகளும் கூட காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் கசிகின்றன.

ஆர்.கே. நகர் தொகுதியில் தோற்றாலும், அரசுக்கு எந்த பங்கமும் இல்லை. திமுகவும் ஓபிஎஸ்ஸும் இதனைக் குறிப்பிட்டு பேசுவார்கள். அது பற்றி கவலை இல்லை. ஆனால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து அமைச்சர், முதல்வர் என முக்கியப் பதவிகளுக்கு அவர் செக் வைக்கக் கூடும். இப்போவே கோடை வெயில் தாங்க முடியவில்லை. கத்திரி வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். அதனால் கத்திரி வெயிலுக்கு கத்திரிப் போட்டுவிட்டால், தோல்வி அடைந்த வேட்பாளர் என்று முத்திரை குத்தி அவரை கட்சியில் ஓரம்கட்டி உட்கார வைத்து விடலாம் என்பது முக்கியப் புள்ளிகளின் திட்டம்.

பின்னர் சொல்கிறோம் என்ற இடம் வந்துவிட்டது. இதையெல்லாம் டிடிவி தினகரன் தெரிந்து கொண்டார் என்றே அரசியல் பட்சிகள் கூறுகின்றன. தனக்கு எதிராக காய் நகர்த்தும் தலைவர்களை இவரால் தடுக்க முடியாது என்பதால், தேர்தலை நிறுத்த முடியும். ஏற்கனவே இதற்கு ஒன்று அல்ல இரண்டு உதாரணங்கள் உள்ளன. அரவக்குறிச்சி, தஞ்சாவூர். எனவே, வெளிப்படையாக பணம் கொடுத்து மாட்டிக் கொண்டால், தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்திவிடும். இதனால், எனக்குக் கிடைக்காத வெற்றி யாருக்குமே கிடைக்காது என்பதுதான் அவரது திட்டம் என்கிறார்கள்.

தேர்தலும் பிரசாரமும் இரட்டைப் பிறவிகள் போல இருந்தனர். இப்போது பிரசாரத்தை ஒதுக்கிவிட்டு, தேர்தலும் பணப்பட்டுவாடாவும் ஒட்டிப்பிறந்தவர்கள் போல நாடகமாடி வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியை மாற்றி, பணம் 11வதாக ஜனநாயகத்தைக் கொலையும் செய்யும் என்று மாற்றிக் கொள்ளலாம்.

இந்த நிலையில்தான் பண நடமாட்டம் குறித்து வந்த புகார்களை ஆராய்ந்து வரும் தேர்தல் ஆணையமும், தேர்தலை தொடர்ந்து நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT