வருமான வரித் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர், சரத்குமார் நேரில் ஆஜர்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகியுள்ளனர்.
கடந்த 7ம் தேதி, சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களிலும், நடிகர் சரத்குமாரின் வீடு, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடியான சோதனை நடத்தினர்.
சோதனையில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இது குறித்து வருமான வரித்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Advertisement
இதையடுத்து, இவர்கள் அனைவரும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் சீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.