முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் முதல்வராவார் என்ற செம்மலையின் கருத்தை தெளிவுப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இரு அணி இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஓபிஎஸ் மீண்டும் முதல்வராவர் என்று முன்னாள் அமைச்சர் செம்மலையின் பேச்சு

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:24 PM
பகிர்:

சென்னை: இரு அணி இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஓபிஎஸ் மீண்டும் முதல்வராவர் என்று முன்னாள் அமைச்சர் செம்மலையின் பேச்சு யாருடைய கருத்து என்று தெரியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை விலக்கி வைப்பதாக அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அதிமுக அம்மா அணி, ஓ.பி.எஸ்., அணி ஆகியன விரைவில் இணைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இரு அணிகளிலும் கோரிக்கை: பேச்சுவார்த்தைக்கு முன்பு எந்தவிதமான கோரிக்கைகளையும் ஏற்க இயலாது என அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை ஓ.பி.எஸ். அணியினர் முன்வைத்து வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஏற்க இயலாது என்று அதிமுக அம்மா அணி தெரிவித்து வருகிறது.

இரு அணியினரும் தங்களது கோரிக்கைகளில் விடாப்பிடியாக இருப்பதால் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக நடக்காததால், இரு அணிகளின் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், இரண்டு அணிகளும் இணையத் தேவையில்லை என்று தொண்டர்கள் பரவலாக கருத்து தெரிவித்தனர்.

மேலும் தொண்டர்களின் மனநிலையை தங்களது தலைவர் ஓ.பன்னீர்செல்வதிடம் தெரிவிப்போம். தங்களது தரப்பை பொருத்தவரை இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு எங்களது கதவுகள் திறந்தே உள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமில்லை. தொண்டர்களின் மனநிலைதான் எங்களுக்கு முக்கியம்.

அதேநேரத்தில் எங்கள் அணி தலைவர் ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக என்ன முடிவு மேற்கொள்கிறாரோ அதற்கு நாங்களும், தொண்டர்களும் முழுமையாக கட்டுபடுவோம்

ஓபிஎஸ் மீண்டும் முதல்வராவார் என்று  செம்மலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், செம்மலையின் பேச்சு யாருடைய கருத்து என்று தெரியவில்லை.

மேலும், காலம் கனிந்துவிட்ட பின்னும் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். கட்சி இரண்டுபட்டதால் சைக்கிள் கேப்பில் ஆட்சிக்கு வரலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சி 4 ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கு பின்னும் தொடரும் என்று ஜெயக்குமார் கூறினார்.

காலம் கனிந்து வருகிறது என்று கூறிவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் இதுபோன்று பேசுவது பன்னீர்செல்வம் குழுவின் கருத்தா அல்லது செம்மலையின் கருத்தா என்பதை அவர்தான் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.