குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வட தமிழகத்திலிருந்து தென் தமிழகம் வரை நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
வட தமிழகத்திலிருந்து தென் தமிழகம் வரை நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காற்று மண்டலத்தின் கீழடுக்குப் பகுதியில், வட தமிழகத்திலிருந்து தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 150 மி.மீ., திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 140 மி.மீ., செங்கத்தில் 130 மி.மீ., வாடிபட்டியில் 120 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த இரு தினங்களைப் பொருத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றார்.
மழை: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் , கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 110 மி.மீ., மழை பதிவானது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், போளூர், கும்பகோணம், வந்தவாசி, உத்தரமேரூர், ஆரணி, லால்குடி, பெரம்பலூர் , முசிறி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்குட்பட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.