இரோம் சர்மிளா-தேம்ஸ்வந்த் கொட்டினக்கோ திருமணம் இன்று நடைபெறவுள்ளது.
கொடைக்கானலில் தங்கியுள்ள இரோம் சர்மிளா, தனது காதலர் தேம்ஸ்வந்த் கொட்டினக்கோவை திருமணம் செய்து கொள்ள ஜூலை 12-ஆம் தேதி சார்- பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார். இதையடுத்து, இத் திருமணத்துக்கு சமூக ஆர்வலர்கள், இந்து மக்கள் கட்சி மற்றும் உழைப்பாளர் உழவர் சங்கத்தினர் எதிர்ப்பும், கோடைமலை அம்பேத்கர், பழனிமலை பளியன், புலையன் கூட்டமைப்பு மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் ஆதரவும் தெரிவித்தனர்.
இதனிடையே, ஆக. 16-ஆம் தேதி கொடைக்கானல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தனது திருமணம் நடைபெற உள்ளதாக மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற இரோம் சர்மிளா தெரிவித்திருந்தார். ஆனால் புதன்கிழமை (ஆக. 16) திருமணம் நடைபெறவில்லை. இத் திருமணத்துக்காக ஒரு சிலர் வெளியூர்களிலிருந்து வந்து கொடைக்கானல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் காத்துக் கிடந்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் சார்- பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இரோம் சர்மிளா- தேம்ஸ்வந்த் கொட்டினக்கோ திருமணம் குறித்து நாங்கள் எவ்வித தகவலும் தெரிவிக்க இயலாது. அவர்கள் இருவரும் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன என்றார்.
கொடைக்கானல் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இரோம் சர்மிளா திருமணம் எப்போது நடைபெற்றாலும் காவல் துறை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே, இரோம் சர்மிளா திருமணம் கொடைக்கானல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.