முகப்பு
தமிழ்நாடு

அசல் ஓட்டுநர் உரிம உத்தரவு: நகல் உரிமங்களைப் பெற திண்டாடும் பொதுமக்கள்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வைத்திருப்பது கட்டாயம் என்ற அரசின் உத்தரவு காரணமாக நகல் உரிமத்தைப்

தமிழ்நாடு

அசல் ஓட்டுநர் உரிம உத்தரவு: நகல் உரிமங்களைப் பெற திண்டாடும் பொதுமக்கள்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வைத்திருப்பது கட்டாயம் என்ற அரசின் உத்தரவு காரணமாக நகல் உரிமத்தைப்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வைத்திருப்பது கட்டாயம் என்ற அரசின் உத்தரவு காரணமாக நகல் உரிமத்தைப் பெற பொது மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்காவிட்டால், ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காவல்துறை அறிவிப்பு: சென்னை மாநகர காவல்துறை சார்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில், மோட்டார் வாகனச் சட்டம் 1988பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது. பொது இடத்தில் வாகனத் தணிக்கையின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்கள்: கடந்த மார்ச் மாதக் கணக்கின் படி தமிழகத்தில் 2.38 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12.34 லட்சம் பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களும், 2.26 கோடி மூன்று சக்கர, இரு சக்கர, இலகு ரக வாகனங்களும் அடங்கும். பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க சுமார் 30 லட்சம் பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர சொந்த வாகனங்களை ஓட்ட சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் உரிமங்களைப் பெற்றுள்ளனர். ஓட்டுநர் உரிமங்களைப் பெற தற்போது பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

உரிமங்களைப் பெற்றுத் தர அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஏராளமான தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது சாதாரண ஓட்டுநர் உரிமம் பெற்ற தமிழக அரசு ரூ. 250-ஐ கட்டணமாக விதித்துள்ளது. ஆனால் நடைமுறையில் சுமார் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம்வரை செலவாகிறது. 

நகல் உரிமங்களைப் பெற...: பொதுவாக ஓட்டுநர் உரிமங்கள் வயதினைப் பொருத்து சுமார் 20 ஆண்டுகள்வரை செல்லத்தக்க வகையில் வழங்கப்படுகின்றன. எனவே ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றவுடன் அதனை பிரதி எடுத்து வைத்துக் கொண்டு அசலை வீட்டில் பத்திரப்படுத்தி வைப்பது என்பது வழக்கமாக உள்ளது. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி அட்டைகள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு அட்டைகள் தொலைந்துவிட்டால் உடனடியாக இதில் தொடர்புடைய அலுவலகங்கள் அல்லது சேவை மையங்களில் இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உடனடியாகப் பெற்றுவிட முடியும். ஆனால் அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் உடனடியாக நகல் உரிமத்தைப் பெற்றுவிட முடியாது. 

தொலைந்து போன உரிமம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பின்னர் உரிமம் வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்று அசல் உரிமம் வழங்கியபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு குறிப்பு பெற்று மீண்டும் காவல் நிலையம் வரவேண்டும். பின்னர்தான் சி.எஸ்.ஆர். (சமுதாயப் பணி குறிப்பேடு) வழங்கப்படும்.

இதன் பின்னர் இப்புகாரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி இங்கு காவல் அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர்தான் தொலைந்த உரிமத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என போலீஸார் சான்று வழங்க முடியும். இந்தச் சான்றினை விண்ணப்பத்துடன் இணைத்து ரூ. 315 கட்டணத்துடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நகல் உரிமங்களைப் பெற சுமார் 20 நாள்கள்வரை காத்திருக்க வேண்டி நிலை உள்ளது. தற்போதைய அறிவிப்பினையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நகல் உரிமங்களைப் பெற அலையத் தொடங்கியுள்ளனர்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்
விபத்துகள் அதிகரிப்பது குறித்து அனைத்துத் தரப்பினரையும் அழைத்து தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் தலைவர் ஆர்.சுகுமார் கூறினார்.

அவர் மேலும் கூறியது: வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்த உடனேயே எங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளோம்.

சென்னையில் ஆண்டுக்கு சுமார் 1500 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 750 பேரும் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். இதற்கு சாலைகள் சரிவர பராமரிக்கப்படாததுதான் காரணம். நெடுஞ்சாலைகளையொட்டிய அணுகு சாலைகள் அனைத்தும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிக்கப்படுகின்றன. பாதசாரிகள் நடந்து செல்ல ஒரு நகரத்தில்கூட வசதிகள் இல்லை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை போலீஸார்தான் தடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் கூட மாடுகள் சுற்றித் திரிகின்றன. அதிவேகமாச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்வதில்லை. சுங்கச் சாவடிகளில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் இதனை ஈடு செய்ய அதிவேகமாக வாகனங்கள் இயக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. 
தேசிய நெடுஞ்சாலைகளில்கூட போதுமான ஒளி விளக்குகள், எச்சரிக்கை பதாகைகள் இல்லை. சாலை பராமரிப்பு மிக மோசமாக உள்ளதை அறிய சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒரு முறை சென்று ஆய்வு செய்து வரவேண்டும். எனவே விபத்துகள் அதிகரிப்பது குறித்து அனைத்துத் தரப்பினரையும் அழைத்து தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும். அசல் உரிம உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றார் சுகுமார்.

நவீன தொழில் நுட்பங்களை அமல்படுத்துவதில் தயக்கம் ஏன்?
இப்பிரச்னை குறித்தும் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆட்டோ நிறுவன உரிமையாளர் ரமேஷ் கூறியது: எந்த ஒரு சட்டத்தையும் அமல்படுத்த அரசு விரும்புவதில் தவறில்லை. காலம் காலமாக பிரதி உரிமம் வைத்திருந்தால் போதுமானது என்ற நிலையில் ஒரே வாரத்தில் கட்டாயம் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பது பொதுஜன விரோதம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. விபத்து நடைபெறுவதற்கும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதற்கும் தொடர்புபடுத்துவது எந்தவகை புள்ளி விவரம் என்பதை அரசு விளக்க வேண்டும். ஒரு விபத்து ஏற்பட்டால் உடனடியாக அங்கு வரும் போலீஸார் முதலில் பறிமுதல் செய்வது வாகனத்தைத்தான். பிறகு விசாரணையின்போது ஓட்டுனர் உரிமம், பதிவு ஆவணம், காப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்துதான் வழக்குப் பதிவு செய்கின்றனர் எனும்போது உரிமம் வைத்திருக்கவில்லை என்பது எப்படி விபத்துக்கான காரணியாக இருக்க முடியும் என்பதே அனைவரது கேள்வியாகும்.

ஆதார் அட்டையை சுமார் 95 சதவீதம் பேர் பெற்றுள்ள நிலையில் எவர் ஒருவரின் அடையாளத்தையும் சில நொடிகளில் அறிய முடியும். இதே நடைமுறையை ஓட்டுநர் உரிமத்தை ஆய்வு செய்வதிலும் தடங்கலாக இருக்கும் தொழில்நுட்பக் கோளாறு என்ன? ஏற்கெனவே அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் கணிணிமயமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. அசல் உரிமங்கள் தொலைந்து போனால் உடனடியாக நகல் உரிமம் வழங்குவதில் சட்டச் சிக்கல் என்ன? எனவே, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்த உத்தரவு மூலம் ஊழலும், லஞ்சமும்தான் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் ரமேஷ்.
 

முழு கட்டுரையைப் படிக்க →