'அதிகாரமிக்கவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை'
பணம், பேர், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கினார்.
பணம், பேர், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கினார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 3-ஆம் நாள் சந்திப்பில் மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியது:-
மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம், இரவு முழுவதும் பயணித்து வந்தாலும், அந்த களைப்பு உங்களிடம் தெரியவில்லை. சிரமங்களை பொறுத்துக் கொண்டு என்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி. 1976-ஆம் ஆண்டில் நான் முதன் முதலாக மதுரைக்கு போய் இருந்தேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போயிருந்த போது, அர்ச்சகர் என்ன ராசி, நட்சத்திரம் என்று கேட்டார். எனக்கு என் நட்சத்திரம் தெரியாது. எதுவும் தெரியாது. அப்போது பக்கத்தில் நடிகை சச்சு இருந்தார். அவர் பெருமாள் நட்சத்திரத்திலேயே அர்ச்சனை செய்ய சொன்னார். அதன் பின்புதான் எனக்கு பெருமாள் நட்சத்திரம் என்று தெரிய வந்தது.
கிடா விருந்து வைக்க ஆசை: வந்திருக்கும் எல்லா ரசிகர்களுக்கும் கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை. ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் அசைவத்துக்கு அனுமதியில்லை. வேறு ஒறு தருணத்தில், வேறு ஒரு இடத்தில் அது நடக்கிறதா என்று பார்ப்போம். உங்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் சினிமா நடிகரின் ரசிகனாக இருந்து வந்தவன்தான். பெங்களூரில் இருக்கும் போது, நான் நடிகர் ராஜ்குமாரின் ரசிகன். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் சேர்ந்த கலவையாக அவர் இருப்பார். அவரை முதன் முதலாக பார்த்த போது, அவரை பார்ப்பதை மறந்து விட்டு, அவர் நடித்த படங்களைத்தான் நினைவு கொண்டேன். நானும் அவரை போய் தொட்டு பார்த்தவன்தான். அதனால் உங்களின் ஆர்வம் புரிகிறது.
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்: கடவுள், தாய், தந்தை இவர்களின் காலில்தான் விழ வேண்டும். உயிர் கொடுத்த கடவுளும், உடல் கொடுத்த தாய், தந்தைக்குத்தான் மரியாதை தர வேண்டும். அதன் பின்னால் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். கஷ்டங்கள், நஷ்டங்கள், இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் கடந்து வந்த பாதை அது. நீயும் அந்த பாதையில் நடக்க போவதால் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பணம், பேர், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை என்றார் ரஜினிகாந்த்.