தமிழ்நாடு

காஷ்மீர் பனிச்சரிவில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களின் உடல் நல்லடக்கம்

DIN

காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களின் உடல்களும் புதன்கிழமை அவரவர் சொந்த ஊரில் 42 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டன.
இதேபோல பனிச்சரிவில் சிக்கி இறந்த தஞ்சாவூரைச் சேர்ந்த இளவரசனின் உடலும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் குரேஷ் எனுமிடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இந்திய ராணுவ முகாம் பாதிக்கப்பட்டது. அதிலிருந்த ராணுவ வீரர்களில் மதுரை மாவட்டம் பல்லக்காபட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (27) உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட மதுரை கே. வெள்ளாகுளத்தைச் சேர்ந்த தாமோதரக் கண்ணனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் உடல்களும் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. ராணுவ வீரர்களின் உடல்களுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இரவோடு இரவாக ராணுவ வீரர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ வீரர் சுந்தரபாண்டியன் உடல் பள்ளக்காபட்டியிலும், தாமோதரக் கண்ணன் உடல் கே.வெள்ளாகுளத்திலும் நல்லடக்கம் செய்யப்பட்டன. அப்போது ராணுவ வீரர்கள் 42 துப்பாக்கிக் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டனர். இறுதியாக ராணுவ பிரிகேடியர் சாங்வான், மேஜர் கமல்தாஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ வீரர்களின் இறுதி சடங்கை முன்னிட்டு அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.
பனிச்சரிவில் இறந்த படைவீரர் ராணுவ மரியாதையுடன் தகனம்: காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி இறந்த படைவீரரின் உடல் தஞ்சாவூர் அருகேயுள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்தவர் பூமிநாதன் மகன் இளவரசன் (27). கடந்த 2011-ல் ராணுவத்தில் சேர்ந்த இவர் காஷ்மீர் மாநிலம், குரேஷ் பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இளவரசன் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இவரது உடல் மீட்கப்பட்டு விமானம் மூலம் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொண்டு வரப்பட்டு கண்ணந்தங்குடி கீழையூருக்குச் கொண்டு செல்லப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை இறந்தவரின் பெற்றோரிடம் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை இளவரசனின் உடல் அவரது இல்லத்திலிருந்து மயானத்துக்கு ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, 14 ராணுவ வீரர்கள் தலா 3 முறை துப்பாக்கியால் மேல் நோக்கிச் சுட்டனர். மொத்தம் 42 குண்டுகள் முழங்க இளவரசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், ராணுவம் சார்பாக கர்னல் வீரசங்கிலி, கர்னல் லோகநாதன், பிரிகேடியர் சாங்கரம், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கணேசன், பள்ளி மாணவ, மாணவிகள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் முழுமையாகப் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இறந்த வீரருக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரத்தநாடு முழுவதும் நண்பகல் 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. கிராமத் தெருக்களில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இளவரசன் திருமணமாகாதவர். இவரது பெற்றோர் பூமிநாதன் - அமுதா, சகோதரர் வினோத்குமார், சகோதரி சுதா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT