தமிழ்நாடு

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

DIN

புது தில்லி: ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பளித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
பின்னர், நால்வர் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததார். தீர்ப்பில், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்குரைஞர் நிரூபிக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.
மேலும், வருமானத்தைவிட 10 விழுக்காடுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 விழுக்காடு மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார்.
இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். எனவே ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது.
வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி நான்கு பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து வழக்கு நடைபெற்ற மாநிலம் என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துக்கொண்டு வந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று இன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி அல்லது நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் செய்தி அதிமுகவினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன என்று கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா எழுதியுள்ள தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT