தமிழ்நாடு

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கே.ஞானதேசிகனுக்கு மீண்டும் பணி

கே.பாலசுப்பிரமணியன்

பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.ஞானதேசிகனுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குநர் பொறுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கே.ஞானதேசிகன், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசுப் பணியில் இருந்து திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது, அரசு அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அவரது பணியிடை நீக்கம் தொடர்பாக அரசு உத்தரவோ அல்லது அதற்கான காரணங்களோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
பணி வழங்கப்பட்டது: கடந்த எட்டு மாதங்களாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த கே.ஞானதேசிகனுக்கு திடீரென அதனை நீக்கி பணி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கக் கூடிய அவருக்கு, சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குநர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் பணியாற்றி வந்தார். அவர் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு அண்ணா மேலாண்மை இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டது. மோகன் வர்கீஸ் சுங்கத்தைத் தொடர்ந்து, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார்.
அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியில் இருந்து திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மிக மூத்த அதிகாரி: தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மிக மூத்த அதிகாரியாக இருப்பவர் கே.ஞானதேசிகன். 1982-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வு பெற்றார். தமிழக அரசின் நிதித் துறை, உள்துறை செயலாளர்களை பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்வாரியத் தலைவராக ஞானதேசிகன் பொறுப்பு வகித்தார்.
இதன்பின், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்தார். அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் பணிக் காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT