தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் கொலைச் சம்பவம்: திருவண்ணாமலையில் 3 கார்கள் எரிப்பு: கடைகள் அடைப்பு

DIN

திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதில் தொடர்புடைய திமுக பிரமுகரின் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதில், 3 கார்கள், 2 பைக்குகள் எரிந்து சேதமடைந்தன. நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
திருவண்ணாமலை சன்னதி தெருவைச் சேர்ந்தவர் வி.கனகராஜ் (51). இவர் அதிமுகவின் திருவண்ணாமலை நகரச் செயலாளராக 18 ஆண்டுகளாக இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு, உள்கட்சி பூசல் காரணமாக அந்தப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இருப்பினும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்து வந்தார். தனது நண்பரான கண்ணதாசனுடன் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கனகராஜ் சென்ற போது, 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டியதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த கண்ணதாசன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது: இந்தக் கொலை தொடர்பாக திருவண்ணாமலை பழைய கார்கானா தெருவைச் சேர்ந்த சரவணன் (27), ராஜா (31), காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த பங்க் பாபு (44) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் பாபு, திமுகவின் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், தனக்குத் தர வேண்டிய ரூ.1.90 கோடியை திருப்பித் தராததால் நண்பர்களுடன் சேர்ந்து கனகராஜை கொலை செய்தது தெரிய வந்தது.
ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைப்பு: இந்த நிலையில், திருவண்ணாமலை, துராபலித் தெருவில் உள்ள பங்க் பாபுவின் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் திங்கள்கிழமை தீ வைத்தனர். இதில், 3 கார்கள், 2 பைக்குகள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
கடையடைப்பு: முன்னதாக, திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை திருவண்ணாமலை நகரின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம்: இதற்கிடையே, இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்தும் புறவழிச் சாலையில் நிறுத்தப்பட்டன. தனியார் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மாலை 6 மணிக்குப் பிறகு நகரில் அடைக்கப்பட்டிருந்த கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டன.

சரணடைந்த பங்க் பாபுவின் ரியல் எஸ்டேட்
அலுவலகத்தில் எரியும் கார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT