தமிழ்நாடு

சாதனை அரசியலும், சமாதி அரசியலும் இனி தொடரவிருக்கும் சிறை அரசியலும்! ராமதாஸ்

தினமணி

இனி அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சிறை அரசியல் தான் அரங்கேறப் போகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில்,
கவுதம புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது என்று பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். அப்போதெல்லாம் போதி மரத்தடியில் ஞானம் கிடைக்கும் அளவுக்கு என்ன மந்திர சக்தி உள்ளது ? என்ற வினா மனதைக் குடையும். போதி மரத்தடியில் தூய்மையான காற்றும் மனதிற்கு இதமான சூழலும் நிலவுவதால் புதிய சிந்தனைகள் உருவாகும் என்ற தெளிவு  பிறந்தது. இவையெல்லாம் 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை.

ஆனால், இப்போது இன்னொரு கலாச்சாரம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அவரது ஆன்மாவுடன் பேசுவது தான் அந்த புதியக் கலாச்சாரம் ஆகும். ஜெயலலிதா கடந்த திசம்பர் 5-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்த பதவிகளை யார் வகிப்பது? என்பது குறித்த விவாதங்களும், அதைத் தொடர்ந்து பதவி ஏற்பும் நடைபெற்று வந்ததால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தினமும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று ஆசி வாங்குவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. தீர்மானத்தை சமாதியில் வைத்து வணங்குவது, கண்ணீர் விடுவது போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டாலும் அவை எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவை என்பதால் மக்களிடையே எந்த பரபரப்பையும் உருவாக்கவில்லை.

ஆனால், தமிழகத்தின் முதல்வர் பதவியிலிருந்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி கழட்டி விடப்பட்ட பன்னீர்செல்வம், பிப்ரவரி 7-ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் அரங்கேற்றிய அதிரடியான நாடகம் தான் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று இரவு 9.00 மணிக்கு ஜெயலலிதாவின் சமாதி முன் அமர்ந்த பன்னீர்செல்வம் திடீரென தியானம் மேற்கொள்ளத் தொடங்கினார். அம்மா மீதுள்ள பாசத்தினால் அப்படி செய்கிறாரா? அல்லது புதிய முதல்வராக பதவியேற்கவிருக்கும் தனிப்பட்ட முதலாளியும், பொதுப்பட்ட பொதுச்செயலாளருமான சின்னம்மா சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக  வேண்டிக் கொள்கிறாரா? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது இது உண்மையல்ல நாடகம் என்று!

பன்னீர்செல்வம் அரங்கேற்றிய இந்த நாடகத்தின் தாக்கம் மிகவும் பயங்கரமாக இருந்தது. அன்றிரவு 9.00 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திகில் தொடர் ‘நந்தினி’, 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சென்டிமெண்ட் தொடர் ‘வாணி ராணி’ ஆகியவற்றின் டி.ஆர்.பி. ரேட்டிங் எல்லாம் அதலபாதாளத்திற்கு சென்று விட, பன்னீர்செல்வத்தின் ‘மெரினாவில் தியானம்’ நாடகம் தான் ரேட்டிங்கை அள்ளியது. மற்ற சீரியல்கள் ஒரு தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பாக தியானம் தொடர் மட்டும் அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகியது.

சரியாக 42 நிமிடம் தியானத்தில் இருந்த பன்னீர்செல்வம் அனைத்து ஊடகங்களும் தமது சுற்றி முகாமிட்டிருப்பதை அறிந்து தியானத்தை முடித்துக் கொண்டு அடுத்த படம் காட்ட எழுந்தார். தம்மை சுற்றி ஊடகங்கள் குவிந்ததை தியானத்தில் இருந்த பன்னீர்செல்வம் எப்படிப் பார்த்தார்? ஓரக்கண் திறந்ததா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் என்னிடம் எந்த பதிலும் இல்லை. ஆனால், தியானத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் அளித்த பேட்டியின் தொடக்கமே ஆவி படத்திற்கு இணையானதாக இருந்தது. ‘‘அம்மாவின் ஆன்மா அழைத்ததால் தான் இங்கு வந்தேன்’’ என்ற என்ட்ரி வசனத்துடன் தொடங்கிய பன்னீரின் பேட்டி,‘‘ எனக்கு நல்ல பெயர் கிடைப்பதை சசிகலாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’’ என்ற சென்டிமெண்டுக்குள் நுழைந்து ‘‘இந்த அநீதியை எதிர்த்து தனி ஆளாக போராடுவேன்’’ என்ற ஆவேச வசனத்துடன் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்தை சசிகலா குடும்பத்திடமிருந்து தமிழகத்தை மீட்க வந்த ரட்சகராக சித்தரிக்கும் முயற்சிகள் தொடங்கின. சசிகலா, பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும்  தங்களின் ஜெயலலிதா விசுவாசத்தை தினமும் அவரது சமாதிக்கு சென்று ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் பேசத் தொடங்கினர். இதனால் ஊடகங்களுக்கும் அதைப் பார்க்கும் மக்களுக்கும் நன்றாக பொழுதுபோனது. இதற்கு கிளைமாக்சாக வந்தது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு தான்.

129 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு இருப்பதால் நம்மைத் தான் ஆட்சி அமைக்க ஆளுனர் அழைப்பார். எப்படியும் கோட்டைக்குள் நுழைந்து விடலாம் என்று தான் சசிகலா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், 9 நாட்களாகியும் ஆளுனரிடமிருந்து அழைப்பு வராத நிலையில், பத்தாவது நாளில் உச்சநீதிமன்றத்திடமிருந்து அழைப்பு வந்தது. ‘‘ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் வருவாய்க்கு மீறிய வகையில் 211% அளவுக்கு சொத்துக்குவித்திருப்பதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும். அதனால் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு செல்லவும்’’ என்பது தான் அந்த தீர்ப்பு ஆகும்.

அத்தீர்ப்பின்படி சரணடைவதற்காக பெங்களூர் செல்வதற்கு முன்பாக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சசிகலா வழிபட்டார். அதைத் தொடர்ந்து ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவேன் என்று கூறி ஆவேசமாக ஜெயலலிதா சமாதி மீது மூன்று முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்தார். அவர் அடித்த அடியில் ஜெயலலிதா சமாதி மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகமுமே அதிர்ந்தது.

சசிகலா சிறைக்கு செல்லும்வரை அவரது கட்சியை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுனர், சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் தான் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்தார். அத்துடன் ஒருவழியாக சசிகலா குழுவினரின் பதவித் தேடல் முடிவுக்கு வர, பன்னீர் செல்வத்தின் பதவியும், பரபரப்பு தேடலும் கூட முடிவுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதியில் மீண்டும் அஞ்சலி செலுத்தினார்கள். இனி பதவியை அனுபவிக்கவும், அதன்மூலமாக வருவாய் ஈட்டவும் மட்டுமே நேரம் இருக்கும் என்பதால் ஜெயலலிதா சமாதியை அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளைத் தவிர வேறு எதற்காகவும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

சமாதி அரசியல் இத்துடன் நிறைவுக்கு வர, அடுத்து சிறை அரசியல் நடைமுறைக்கு வருகிறது. இராமாயணத்தில் இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பதைப் போல, சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் சிறை தான் இனி அதிமுகவினருக்கு தலைமைக் கழகமாக இருக்கப் போகிறது. அதனால் தான் முதல்வராக பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலகத்துக்கு கூட போகாத எடப்பாடி பழனிச்சாமி இன்று பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவிடம் வாழ்த்துப் பெறச் செல்லப்போகிறாராம். 

அதிமுக அரசின் பதவிக்காலமும், சசிகலாவின் தண்டனைக் காலமும் கிட்டத்தட்ட ஒரே நாளில் தான் முடிவுக்கு வரும் என்பதால் அதிமுக அரசை சிறையிலிருந்து தான் சசிகலா இயக்குவார். இனி அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சிறை அரசியல் தான் அரங்கேறப் போகிறது.

ஒரு காலத்தில் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து வந்த போது, பிரதமர் நேருவைக் கூட கேட்காமல் ஆயுதங்களை தயாரித்த பெருமைக்குரிய முதல்வர் ஓமந்தூரார் விருதுப்பட்டியில் இருந்து கொண்டே இந்திய பிரதமர்களை உருவாக்கிய காமராஜர், யேல் பல்கலைக்கழக மாணவர்களை தமது உரையால் மெய்சிலிர்க்க வைத்த அண்ணா ஆகியோர் நடத்திய சாதனை அரசியல். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தட்டிக் கேட்கும் துணிச்சல் தமிழக தலைவர்களுக்கு இருந்தது. ஆனால், இன்றோ தலைவர்களுக்கு தொண்டூழியம் செய்து பதவிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய  நிலை தான் இன்று நிலவுகிறது.

முதலில் சாதனை அரசியல், பின்னர் சமாதி அரசியல், அதைத் தொடர்ந்து இப்போது சிறை அரசியல் என தமிழக அரசியலின் பரிணாம வளர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. வேறு வழியின்றி, இதையெல்லாம் நாமும் சகித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். என்ன செய்வது.... எல்லாம் நமது தலையெழுத்து! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT