தமிழ்நாடு

'பூரண மதுவிலக்குதான் வேண்டும்'

DIN

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
குமரி அனந்தன்: இந்தியாவின் சர்வ அதிகாரம் உடைய தலைவனாக என்னை ஆக்கினால், ஒரு மணி நேரத்தில் நஷ்ட ஈடு கொடுக்காமல் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிடுவேன் என்றார் காந்தியடிகள். அவர் பெற்றுத் தந்த சுதந்திர இந்தியா, கடந்த 70 ஆண்டுகளாக அவரது கனவை நிறைவேற்றவில்லை.
உச்ச நீதிமன்றம் பல ஆயிரம் கடைகளில் 2,700 கடைகளையாவது முதலில் மூடுங்கள் என்று சொன்னால், தமிழக அரசு 500 கடைகளை மட்டுமே மூடுவோம் என்கிறது. கடைகளை மூடுவதைவிட, பூரண மதுவிலக்கையே மக்கள் கேட்டு வருகின்றனர்.
1917- இல் சேலம் நகர சபை தலைவராக ராஜாஜி இருந்தபோது தனது நகர சபை எல்லைக்குள் மதுவிலக்கை அமல்படுத்தினார். அவர் மதுவிலக்கு கொண்டு வந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இதை மனதில் வைத்து பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், "நமது இலக்கு, பூரண மதுவிலக்கு' என்ற முழக்கத்துடன் 13-ஆவது முறையாக மக்களின் ஆசியைப் பெறுவதற்காக யாத்திரை செல்வேன்.
அன்புமணி: தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 7,000 மதுக் கடைகள் இருக்கும் நிலையில், அவற்றில் 500 கடைகள் கடந்த ஆண்டு ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன் மூடப்பட்டன.
தற்போது மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவிப்பதால் பயனில்லை. இதே வேகத்தில் சென்றால் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மொத்தம் 14 ஆண்டுகள் ஆகும். அதற்குள் மதுவால் சரி செய்ய முடியாத அளவுக்கு சீரழிவுகள் ஏற்பட்டுவிடும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் உள்ள 2,700 மதுக்கடைகளை மார்ச் 31-ஆம் தேதி மூடும்போது, தமிழகத்தில் உள்ள மற்ற கடைகளையும் மூடி, முழு மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.
ஜவாஹிருல்லா: தமிழகத்தில் அடித்தட்டு, நடுத்தர குடும்பங்களில் உள்ள பெரும்பாலான ஆண்கள், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மதுக்கடைகளை முழுமையாக மூடவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மூடப்பட்ட 500 மதுக்கடைகளும் குறைந்த அளவில் மது விற்பனை செய்த கடைகளாகும். மேலும் 500 மதுக் கடைகளை மூடுவது என்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், முழுமையான மதுவிலக்கே தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT