தமிழ்நாடு

பதநீர் சீசன் தொடங்குவதில் தாமதம்: விலை உயரும் கருப்புக்கட்டி

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பதநீர் சீசன் தொடங்க காலதாமதம் ஆவதால், பனைவெல்லம் என்ற கருப்புக்கட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அடைக்கலாபுரம், காயல்பட்டினம், உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பதநீர் சீசன் ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
அந்த நேரங்களில், பதநீர் காய்ச்சி கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு மற்றும் புட்டு கருப்புக்கட்டி என்ற சில்லு கருப்புக்கட்டி தயார் செய்து விற்பனைக்கு வரும். இந்த கருப்புக்கட்டி விலை மலிவாக இருக்கும். சீசன் இல்லாத நேரத்தில் கருப்புக்கட்டி இருப்பு வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும்.
இப் பகுதிகளில் பனைத் தொழில் செய்வதற்கு ஆள்கள் கிடைக்காததாலும், பனைகள் இருந்த இடங்களில் பனைகள் வெட்டப்பட்டு அவ்விடங்கள் மனைகளாக மாறி விட்டதாலும் பதநீர் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டதோடு, கருப்புக்கட்டி உற்பத்தியும் மிகவும் குறைந்து விட்டது.
மேலும், சீனி உபயோகம் அதிகரித்து உற்பத்தி இல்லாததால் விலை உயர்ந்த கருப்புக்கட்டி உபயோகமும் தற்போது குறைந்து விட்டது. ஆனால் தற்போது சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை கூடி விட்டதால், பலரும் கருப்புக்கட்டி உபயோகத்துக்கு மாறி வருகின்றனர்.
பொதுவாக, இப் பகுதியில் கருப்புக்கட்டி உற்பத்தியாகி வருவதற்கு முன்னதாக இம் மாவட்டத்திலுள்ள வேம்பார் பகுதிகளிலிருந்து கருப்புக்கட்டி விற்பனைக்கு வந்து விடும். நிகழாண்டு தற்போது வரை அங்கிருந்து கருப்புக்கட்டி வரவில்லை. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இப் பகுதியிலுள்ள பழைய கருப்புக்கட்டி 10 கிலோ சிப்பம் விலை ரூ.2,100-க்கு விற்பனையானது. அப்போது வேம்பாரிலிருந்து வந்த புதிய கருப்புக்கட்டி ரூ.950 முதல் 1000 வரை விற்பனையானது. ஆனால் நிகழாண்டு இப் பகுதியில் உள்ள பழைய கருப்புக்கட்டி 10 கிலோ சிப்பம் ரூ.2,800 வரையிலும்,வேம்பார் கருப்புக் கட்டி 10 கிலோ சிப்பம் ரூ.2,600 வரையிலும் விற்பனையாகிறது. சில்லறை விலை கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சீசன் தொடக்கத்தில் வேம்பார் கருப்புக்கட்டி கிலோ ரூ.100-க்கும், திருச்செந்தூர் வட்டார கருப்புக்கட்டி கிலோ ரூ.120-க்கும் விற்பனையானது. மழை அதிகம் பெய்யாததால் பனைகளில் தற்போது பாளைகள் அதிகம் வரவில்லை என்றும், இதனால் பதநீர் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் பதநீர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT