தமிழ்நாடு

ஐம்பொன் விநாயகர் சிலை கடத்தல்: கடலூரில் 5 பேர் கைது

DIN

மயிலாடுதுறையிலிருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்கு காரில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்த முயன்ற 5 பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்கு பழங்கால ஐம்பொன் சிலை கடத்தப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் கடந்த 2 நாள்களாக கடலூரில் முகாமிட்டு கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில், மயிலாடுதுறையிலிருந்து சிலை கடத்திவரப்பட்டு, கடலூரில் பரிமாற்றம் நடைபெற உள்ளதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், கடலூர் மாவட்ட எஸ்.பி. செ.விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் சாதாரண உடையில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 கார்கள் வாகனத் தணிக்கை செய்யும் இடத்துக்கு முன்பே திடீரென நிறுத்தப்பட்டது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த கார்களை சோதனையிட முயன்ற போது, ஒரு காரிலிருந்து 2 பேர் இறங்கி தப்பியோட முயன்றனர். உடனடியாக அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று துப்பாக்கி முனையில் பிடித்தனர். மற்றொரு காரில் இருந்த 3 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களது காரில் நடத்தப்பட்ட சோதனையில், சாக்குப் பையில் சுற்றப்பட்டு சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலை போலீஸாரால் மீட்கப்பட்டது.
கார்களில் வந்த புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த நா.ஞானசேகரன் (44), கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முகுந்தன் சர்மா (30), மயிலாடுதுறையைச் சேர்ந்த நா.வினோத் (31), செள.செந்தில் (29), அ.ராஜா (23) ஆகிய 5 பேரையும் கடலூர் புதுநகர் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை அடி ஐம்பொன் விநாயகர் சிலையின் மதிப்பு சுமார் ரூ.4 கோடியாகும். இந்தச் சிலை சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.
இதுவரை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகளை மீட்டுள்ளோம். மேலும், ரூ.ஆயிரம் கோடி மதிப்பிலான சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். அவற்றை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT