தமிழ்நாடு

ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் புகைப்படங்களை வெளியிடவில்லை: உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ தகவல்

DIN

மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் போது, தனது புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால்தான் அவரின் புகைப்படங்களை வெளியிடவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பி.ஏ. ஜோசப் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகக் கூறி மத்திய, மாநில அரசுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனைகள் சார்பில் சட்டப் பிரிவு மேலாளர் எஸ்.எம்.மோகன்குமார் தாக்கல் செய்த பதில் மனு விவரம்: இந்திய மருத்துவக் கவுன்சில் நெறிமுறையின்படியே, மருத்துவச் சிகிச்சை தொடர்பான விவரங்கள் ரகசியம் காக்கப்பட்டது.
உலக அளவில் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் சர்வதேச கூட்டு ஆணையத்தின் உறுப்பினராக உள்ளதால், அதன் விதிமுறைப்படியும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நோய், சிகிச்சை ஆகிய விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டது. முதல்வர் விருப்பத்தின் பேரிலேயே, சிகிச்சை குறித்த விவரங்களை வெளியிடவில்லை. மேலும் அவர் கேட்டுக்கொண்டதன்படி, அவரது புகைப்படத்தையும் வெளியிடவில்லை.
அதேபோன்று அரசின் வேண்டுகோள்படி, பொது அமைதியைப் பேணவும், யூகங்களை குறைக்கவும், வதந்திகளை தடுக்கும் வகையிலேயே மருத்துவமனையின் சார்பில் சிகிச்சை குறித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
மிகச்சிறந்த சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் அனைத்து கருத்துகளும் உண்மையை அடிப்படையாக கொண்டதல்ல. அவை செவிவழிச் செய்தியாகும். நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று மனுவில் தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், "இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, முதல்வர் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், அவருடைய சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வெளியிடத் தேவையில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி சிகிச்சை பெறுபவரின் தகவல்களை பாதுகாப்பதும், மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வழிவகை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் காலம் அவகாசம் வழங்கி, விசாரணை மார்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT