தமிழ்நாடு

நெல்லையில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து கைதி வெட்டிக் கொலை

DIN

திருநெல்வேலியில் பட்டப் பகலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் சென்ற வாகனத்தை வழிமறித்து, விசாரணைக் கைதி வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் அருகேயுள்ள புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (எ) சிங்காரம் (50). இவர், கடந்த 8.1.2016இல் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நடந்த கோஷ்டி மோதலில், சம்பவம் நடந்த மறுநாள் ஜெலட்டின் குச்சிகளுடன் கைது செய்யப்பட்டார். அப்போது, காவலர் ஜான்பாண்டியனை தாக்கியதாகவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கைதான சிங்காரம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஓராண்டுக்கு மேலாக விசாரணைக் கைதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சிங்காரத்தை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த வேண்டியிருந்தது. இதற்காக, தூத்துக்குடி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் வீரபாகு, துப்பாக்கி ஏந்திய 3 காவலர்கள், ஓட்டுநர் என மொத்தம் 5 பேர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு போலீஸ் வாகனத்தில் வந்தனர். அங்கிருந்து சிங்காரத்தை ஏற்றிக் கொண்டு, தூத்துக்குடி நோக்கிச் சென்றனர். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட புறவழிச் சாலை (தூத்துக்குடி செல்லும் சாலை) கேடிசி நகர் பகுதியில் வரும்போது போலீஸ் வாகனத்துக்கு முன்பாக மீன்பாடி வண்டியும், பின்னால் ஒரு காரும் நெருக்கமாக வந்தன.
அந்த நேரத்தில், எதிரே மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், மிளகாய் பொடியுடன் தண்ணீர் கலந்து வைத்திருந்த பாட்டில்களை போலீஸ் வாகனத்தின் மீது வீசினர். இதில், போலீஸார் நிலைதடுமாறிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர். இதில், போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் நொறுங்கின. கையில் ஊன்றுகோலுடன் தப்பியோட முயன்ற சிங்காரத்தைப் பிடித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் சிங்காரம். இந்த சம்பவத்தில் போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.
பட்டப் பகலில் இந்த சம்பவம் நடந்ததால், அப் பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு போலீஸாரும், சிங்காரமும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு, சிங்காரம் உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை, திருநெல்வேலி மாநகரக் காவல் துறை ஆணையர் ஞானம், துணை ஆணையர் பிரதீப்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் விக்ரமன் (திருநெல்வேலி), அஸ்வின் கோட்னீஸ் (தூத்துக்குடி) உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

5 தனிப்படைகள் அமைப்பு


சிங்காரம் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகரக் காவல் துறை ஆணையர் ஞானம் தெரிவித்தார். கொலையான சிங்காரத்தின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பசுபதி பாண்டியனின் வலதுகரமாகவும், சில மாதங்களுக்கு முன் சுபாஷ் பண்ணையாரை கொலை செய்ய முயன்ற சம்பவத்துக்கு மூளையாகவும் செயல்பட்டதால், பழிவாங்கும் நோக்கில் சிங்காரம் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸ் துப்பாக்கி உடைப்பு

சிங்காரத்தை அழைத்துச் சென்ற போலீஸார், கையில் துப்பாக்கி ஏந்திச் சென்றனர். மர்ம கும்பலைச் சேர்ந்த 13 பேர் போலீஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு ஆயுதங்களால் தாக்கியதில், போலீஸார் வைத்திருந்த துப்பாக்கியும் சேதமடைந்தது. அரிவாளால் வெட்டியதில் துப்பாக்கியின் மரக்கட்டை பகுதி இரண்டு துண்டாகியது. வாகனத்தின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கின. சம்பவ இடத்தில் அரிவாள், மிளகாய் பொடியுடன் தண்ணீர் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. போலீஸார் அவற்றைக் கைப்பற்றி தடயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கேமரா காட்சிகள் ஆய்வு

சிங்காரம் கொலை செய்யப்பட்ட கேடிசி நகர் பகுதியானது, திருநெல்வேலி மாநகரத்தின் விரிவாக்கப் பகுதியாகும். பிரதான சாலையான இங்குதான் அரசுப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் உள்ளது. மேலும், பல்வேறு வணிக நிறுவனங்களும் உள்ளன. கொலை நடந்த இடத்துக்கு அருகில் தனியார் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில், கொலை சம்பவக் காட்சிகள் பதிவாகியுள்ளன. இவற்றை கைப்பற்றிய போலீஸார், மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT