தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டம்: கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது

DIN

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியாமல் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
பா.ஜ.க. நிர்வாகி இல்ல துக்க நிகழ்வில் பங்கேற்க திருச்சி வந்த அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:
விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. எந்த திட்டம் வந்தாலும் அது லாபமா, நஷ்டமா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு பிறகே முடிவெடுக்க வேண்டும். தற்போது ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த நேர்மாறான தகவல்கள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முழுமையாக தெரியாமலேயே எதிர்க்க தொடங்குகின்றனர்.
திட்டம் நிறைவேற்றப்பட்டால் லாபமா அல்லது நஷ்டமா என்பதே தெரியாமல் எதிர்ப்பு தெரிவித்தால், அது தமிழகத்துக்கு செய்யக்கூடிய துரோகமாகும். அதேநேரத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே ஆக வேண்டும் என சொல்லவில்லை.
நெடுவாசலில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முழுமையான ஆய்வுகளை நடத்தி, அதற்கு பிறகு மக்கள் வேண்டாம் என்று சொன்னால், அந்த திட்டம் தேவையில்லை. அதற்கு முன்பே எதிர்க்கக் கூடாது.
தமிழகத்தில் காமராஜர் காலத்துக்குப் பிறகு ஏதாவது ஒரு திட்டமாவது உருப்படியாக வந்துள்ளதா? அவர் காலத்தில் ஏராளமான அணைகள் கொண்டுவரப்பட்டன. ஒரு அணை கட்டும்போது கவிஞர் வைரமுத்து வாழ்ந்த கிராமம் பாதிக்கப்பட்டது. அந்த கிராம மக்கள் தங்களது இடத்தை மனப்பூர்வமாக கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர். இந்த நிகழ்வை இன்றளவும் அந்த மக்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.
இன்று சமூக வலைதளங்கள் வந்துவிட்ட பிறகு, மனதுக்கு தோன்றியதையெல்லாம் பதிவு செய்கின்றனர். நல்லதா, கெட்டதா என்பது பற்றி கவலைப்படுவதில்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், நாம் எல்லா விஷயங்களையும் பரிமாறிக்கொள்வது தவறான செயலாகும்.
சமூக வலைதளங்கள் வழியாக தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என்றார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT