முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:07 AM
பகிர்:

தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இவற்றில் வேட்டையாடப்பட்டதன் மூலம் 28 யானைகளும், மின்வேலி மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக 65 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இந்தத் தகவல்கள், வனத் துறையிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டதில் தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக 2013-ஆம் ஆண்டில் மட்டும் 126 யானைகள் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்துள்ளன. கோவையில் மட்டும் ரயில் மோதியும், கிருமித் தொற்று காரணமாகவும் கடந்தாண்டு 22 யானைகள் உயிரிழந்துள்ளன.
இதுமட்டுமல்லாமல் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை உயிரிழந்துள்ள புலி மற்றும் சிறுத்தைகளின் புள்ளிவிவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 53 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் விஷம் வைக்கப்பட்டு 9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் மின்வேலி மின்சாரத்தால் ஒரு புலியும், ஆட்கொல்லி என சுடப்பட்டு 3 புலிகளும் உயிரிழந்துள்ளன. தமிழகக் காடுகளைப் பொருத்தவரை 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 229 புலிகள் உள்ளன.
தமிழகக் காட்டின் பரப்பளவு சுருங்குவதால் பல மலைக் கிராமங்கள் சிறுத்தையின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. இதில் 2001 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் 207 சிறுத்தைகள் பலியாகியுள்ளன. இதில் 201 சிறுத்தைகள் இயற்கையான முறையில் உயிரிழந்துள்ளன.
யானைகள் உயிரிழப்பு: தமிழகத்தில் கணக்கெடுப்பின்படி 4,200 யானைகள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட, மின்சாரம் தாக்கி அதிக அளவில் யானைகள் உயிரிழக்கின்றன.
முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன. 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன.
யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்குக் காரணம் என்ன? விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம்.
இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயத்தால் மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.
இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதல் வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதனால் வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன என வனத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்படும் புலிகள்: 2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. இதில் 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், 2015- ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. புலிகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. புலிகளின் உயிரிழப்பு தொடர்ந்தாலும், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக வன்ததுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 ஆண்டுகளில் 400 பேர் பலி!
தமிழகத்தில் மனிதன் - வன விலங்குகள் மோதல் காரணமாக 2006-2015-ஆம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் யானை தாக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு இதுவரை ரூ.19 கோடியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது.

முதுமலையில் வறட்சி இல்லை!
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நதி வற்றாததால், வறட்சி பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று தலைமை வனப் பாதுகாவல் (நீலகிரி) மற்றும் திட்ட இயக்குநர் (மலைப் பகுதிகள்) ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் பரவலான வறட்சி முதுமலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முதுமையில் பாயும் மாயாறு நதி வற்றவில்லை. இதனால் வன விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏதுமில்லை.
ஆனால், காப்பகத்தில் இருக்கும் நீர் குட்டைகள் வறண்டுவிட்டன. இந்தக் குட்டைகள், லாரிகள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகின்றன. யானைகளுக்கு இப்போதிருக்கும் நீர் தேவையான அளவைவிட சற்று குறைவாக இருக்கிறது.
மேலும், யானை ஓரிடத்தில் மட்டும் இருக்கக் கூடிய விலங்கு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யானைகள் முதுமலையில் தனது குட்டிகளுடன் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. மேலும், கோடைக் காலங்களில் உணவும், நீரும் தேடி முதுமலை காப்பகத்தை விட்டு வெளியே செல்லும் யானைகள் ஆகஸ்ட் மாதத்துக்கு பின்பு காப்பகத்துக்கு திரும்பும். இது வழக்கமான நிகழ்வுதான் என்றார் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments