உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநரும் தமிழறிஞருமான ச.வே.சுப்பிரமணியன் (87) ஜன. 12ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை காலமானார்.
உடல்நலக் குறைவால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மரணமடைந்தார். பின்னர், அவரது உடல், அவர் உருவாக்கிய திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள தமிழூருக்கு கொôண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழறிஞர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ்ச் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வாழ்க்கைக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூரில் 31.12.1929இல் சு. சண்முக வேலாயுதம் பிள்ளை, ராமலக்குமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். விக்கிரமசிங்கபுரம் தூய இருதய தொடக்கப் பள்ளி, அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
1953இல் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 1956 வரை பணியில் இருந்தார். பின்னர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பணியாற்றி, சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக உயர்ந்தார். 1969ஆம் ஆண்டு பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை நிறுவிய பெருமை இவரைச் சாரும். இவரது, வாழ்க்கை வரலாறு தமிழ் ஞாயிறு, சாதனைச் செம்மல் ச.வே.சு. என்ற பெயரில் நூல்களாக வெளிவந்துள்ளன.
குடும்பம்: மனைவி பார்வதி அம்மாள். மகன் சண்முக வேலாயுதம் (58), ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். மற்றொரு மகன் ஆவுடைநாயகம் (56), கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிகிறார். 2 பேத்திகள், ஒரு பேரன் உள்ளனர்.
எழுதிய நூல்கள்: இதுவரை, தமிழில் 165 நூல்களும், ஆங்கிலத்தில் 9 நூல்களும், மலையாளத்தில் ஒரு நூலும் எழுதிய ச.வே.சு., தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகத்திலும் உரையாற்றி அவற்றையும் நூல்களாக வெளியிட்டுள்ளார். கூடவே 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், 100-க்கும் மேற்பட்ட வானொலி பேச்சுக்களும் இவரது சாதனையாகும். இவரது தமிழ் நிகண்டுகள் எனும் நூலானது, தமிழ் வளர்ச்சித் துறையின் 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் ஆகிய நிலைகளில் பரிசுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உலக அரங்கில்: தமிழ் வளர்ச்சிக்காக இந்தியா மட்டுமன்றி இலங்கை, மொரீஷியஸ், மேற்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவோகியா, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, மணிலா, சிங்கப்பூர், மலேசியா, பாரிஸ், லண்டன், ஏதென்ஸ், கெய்ரோ போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழ்ப் பணியாற்றியவர்.
தமிழூர்: 1985ஆம் ஆண்டு ஆலங்குளம் அருகே தமிழூர் என்ற ஊரை உருவாக்கி அதை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்து வந்தார். இங்கு தமிழன்னைக்கு சிலை வைத்து வணங்கிய பெருமையும் இவரையே சேரும். மதுரைக்கு அடுத்து தமிழூரில்தான் தமிழன்னைக்குச் சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. கீதா செல்வி என்ற ஆய்வு மாணவி, ச.வே.சு.வின் தமிழ்ப் பணி குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவரது வழிகாட்டுதலின்பேரில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
விருதுகள்: 1984ஆம் ஆண்டு கம்பன் இலக்கிய உத்திகள் என்ற நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசையும், விருதையும் பெற்றார். 1999இல் சாகித்ய அகாதெமி வழங்கிய பாஷாம்மாள் என்ற விருது, 2004இல் தொல்காப்பியச் செம்மல் விருது, 2009இல் கலைஞர் பொற்கிழி விருது, 2013இல் ம.தி.தா. கல்லூரி வழங்கிய தமிழ்க் காவலர் விருது, அதே ஆண்டு தினத்தந்தியின் மூத்த தமிழறிஞர் விருது, 2016இல் குற்றாலம் முத்தமிழ் அறிவியல் மன்றம் வழங்கிய தமிழாய்வுச் சிகரம் விருது, கம்பன் விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, ராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு உள்பட 29 விருதுகளை பெற்றுள்ளார்.
இறுதிச் சடங்கு: இறுதிச் சடங்கு தமிழூரில் உள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 13) காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். தொடர்ந்து தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது. தொடர்புக்கு: 9940770433.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.