முகப்பு
தமிழ்நாடு

சென்னை கடற்கரையில் ஆலிவ் ரிட்லி வகை ஆமை முட்டைகள் சேகரிக்கும் பணி தொடக்கம்!

சென்னை கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாக்கும் பணியை தமிழக வனத் துறை தொடங்கியுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

சென்னை கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாக்கும் பணியை தமிழக வனத் துறை தொடங்கியுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன. இந்த முட்டைகளைப் பாதுகாத்து சேகரிக்கும் பணியில் தமிழக வனத் துறையும், சில தன்னார்வலர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையைப் பொருத்தவரை விஜிபி, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் தமிழக வனத் துறை சார்பில் ஆமைக் குஞ்சு பொரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரங்களில் இருந்து சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இந்த மையங்களில் பாதுகாக்கப்படும்.
11 ஆயிரம் முட்டைகள்: 45 நாள்களுக்கு பிறகு முட்டையில் இருந்து ஆமைக் குஞ்சுகள் இயற்கையான முறையில் வெளிவரும். பொதுவாக, காலை அல்லது மாலை நேரங்களிலேயே முட்டையில் இருந்து ஆமைகள் வெளியேறும். அப்போது அவை சேகரிக்கப்பட்டு கடலுக்குள் விடப்படும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இப்போது வரை 11,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இந்த முட்டைகளைச் சேகரிக்கும் பணி இரவு 11 மணியளவில் தொடங்கி காலை 5 மணி வரை நடைபெறும். கடற்கரை மணல் பரப்பில் குழிதோண்டி இடப்படும் முட்டைகள், சுமார் 45 நாள்களுக்குப் பிறகு இயற்கையாகப் பொரிந்து குஞ்சுகள் வெளியேறி கடலுக்குள் சென்றுவிடும். நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் முட்டைகள் சேதமாக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு, முட்டைகளை வனத் துறை பாதுகாத்து குஞ்சுகளைப் பொரிக்கச் செய்கிறது. இதனால், கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குஞ்சுகள் பொரிக்கும். இங்கு சேகரிக்கப்படும் முட்டைகளில் இருந்து 95 சதவீத குஞ்சுகள் பாதுகாப்பாக பொரிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments