புதுச்சேரி ஆளுநர் செய்தி மீது பேச வாய்ப்பு தராததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் செய்தி தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் செய்தி தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை இரண்டாவது நாளாக புதன்கிழமை கூடியதும், ஆளுநர் கிரண்பேடியின் செய்தியை பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் வாசித்தார்:
அன்பழகன்: ஆளுநர் தனது உரையை படிக்க அனுமதி கேட்டிருந்தாரா?
பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: அவருக்கு அந்த உரிமை உள்ளது. கடிதம் தந்திருந்தார்.
முதல்வர்: துணைநிலை ஆளுநர் நவம்பர் 2016-ம் ஆண்டு கடிதம் எழுதி அக்கடித்தின் மூலம் அக்டோபர் 2-ம் தேதி 2017-க்குள் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக ஆக்குவது தொடர்பாக பேரவையில் பேச விருப்பம் தெரிவித்தார். இதுதொடர்பாக கடந்த 13-ம் தேதி பேரவையில் நாங்கள் அனுப்பிய பதிலில் நீங்கள் பேரவையில் 2-வது நாள் திறந்தவெளி கழிப்பிடம் திட்டம் குறித்து பேசலாம் என கூறியிருந்தோம்.
நீங்கள் பேசும் உரையை அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்புமாறு கேட்டிருந்தோம். சட்டவிதியின்படி துணைநிலை ஆளுநர் அவரது செய்தியை அனுப்பி இருந்தால், தலைவர் அதை படிப்பார். துணைநிலை ஆளுநருக்கு பேரவையில் பேச உரிமை உள்ளது. ஆனால் ஆளுநர் பேரவையில் பேசவில்லை எனக்கூறி விட்டார்.
அன்பழகன்: உரைநிகழ்த்த விருப்பம் இல்லை. அரசு சார்பு நிறுவனத்தில் 700 கோடி இழப்புள்ளது என ஆளுநர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவிக்க 24 மணி நேரம் அவகாசம் தர வேண்டும். புதுவை மாநில நிதி நிலை குறித்து கூறியுள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். நீங்களும் அலுவல் ஆய்வுக்குழுவில் உறுப்பினராக உள்ளீர். அப்போது பேசாமல் இப்போது ஏன் பேசுகிறீர்கள்.
லட்சுமிநாராயணன்: ஆளுநர் செய்தி அனுப்பினார். அதை படித்தாகி விட்டது. ஆளுநர் செய்தி ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே பட்ஜெட் புத்தகத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. தெளிவாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர்: நான் வரவில்லை என ஆளுநர் கூறி விட்டார். அரசை ஆளுநர் குற்றம் சாட்டவில்லை.
பாலன்: சட்டப்பேரவைத் தலைவரின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது. இதற்கு அனுமதி தரக்கூடாது.
பேரவைத் தலைவர்: ஆளுநர் செய்தி குறித்து ஆய்வு தான் செய்ய வேண்டும். விவாதம் தேவையில்லை. நீங்கள் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர். நீங்கள் அங்கு வைத்து பேசிக் கொள்ளலாம்.
கொறடா: அதிமுக உறுப்பினர் அவை விதிகளை அறியாமல் பேசி வருகிறார்.
வைத்திலிங்கம்: மதிப்பீட்டுக்குழு, பொதுக்கணக்கு குழு இந்த செய்தியை ஆய்வு செய்து பேரவைக்கு அறிக்கை தர உத்தரவிடுகிறேன். குழுக்களில் உறுப்பினர்கள், அதிகாரிகளும் உள்ளனர். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.
அன்பழகன்: ஆளுநர் செய்தியில் அரசின் நிதிநிலை, சார்பு நிறுவனங்கள் முறைகேடு குறித்து குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேச அனுமதி தராததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். ஆளுநர் செய்தி தொடர்பாக அரசு உரிய விளக்கம் தரவில்லை. இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.