முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்திற்கு 'நீட்'  தேர்வு தேவையில்லை  என்று விலக்கு கோரி சட்டம் வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், அதிலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் ..

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 'நீட்'  தேர்வு தேவையில்லை  என்று விலக்கு கோரி சட்டம் வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், அதிலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் ..

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:51 AM
பகிர்:

சென்னை: தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், அதிலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு “நீட்“ நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்“ என்ற மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதத்திலும், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதியை நசுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

2013-ம் ஆண்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு “நீட் தேர்வை“ ரத்து செய்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பாடதிட்டம் இருக்கிறது. தனித்தனி பயிற்று முறை இருக்கிறது. ஆகவே அனைத்து மாணவர்களுக்கும் “அகில இந்திய தேர்வு“ என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கு நகர்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், கோச்சிங் மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை.

கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வி பயின்றால்தான் கிராம மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் எளிதில் கிடைப்பார்கள். “நீட் தேர்வால்“ கிராமப்புறத்தில் டாக்டர்கள் உருவாகும் நிலை தடுக்கப்படும்

ஆனால் பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டது. வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வின் முன்பு நிலுவையில் இருக்கும் போதே நீட் தேர்வை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்து விட்டது. இந்த “நீட்“ நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு,  கிராமப்புற ஏழை எளிய முதல் தலைமுறையினர் மருத்துவர்களாக படித்து முன்னேறவும் பெரும் தடையாக இருக்கிறது.

பொதுப்பட்டியலில் உள்ள “மிருகவதை தடுப்புச் சட்டத்தை“ திருத்தி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழி வகுக்கும் “மாநில மிருகவதை தடுப்புத் திருத்தச் சட்டம்“ கொண்டு வந்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு தி.மு.க. திறந்த மனதுடன் ஆதரவளித்தது.

அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி “தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை“ என்பதற்கு நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்ட தொடரிலேயே சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி, கவர்னர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும். அந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்கு தி.மு.க. முழு ஆதரவு அளித்து, துணை நிற்கும்.

கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாகவும், சமூகநீதி பாதுகாக்கப்படவும் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்து இந்த வருடமே நீட் தேர்வு எழுதுவதற்கு விலக்களிக்கும் வகையில், தேவைப்பட்டால் சட்டமன்ற கூட்டத் தொடரை நீட்டித்துக் கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு  அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →