தமிழ்நாடு

கடனாநதி அணைப் பகுதியில் 6ஆவது சிறுத்தை சிக்கியது!

DIN

திருநெல்வேலி மாவட்டம், கடனாநதி அணை அடிவாரப் பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இப்பகுதியில் இதுவரை 6 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கடனாநதி அணை அடிவாரத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு. இந்தப் பகுதி மக்கள் விவசாயம் மற்றும் அதுசார்ந்த ஆடு, மாடு வளர்ப்பைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வனப் பகுதியிலிருந்து கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்டவை மலையடிவாரப் பகுதிக்குள் நுழைந்து விவசாய நிலங்களை பாழாக்குவதோடு, சிறுத்தை போன்ற விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய் போன்ற வளர்ப்பு விலங்குகளைப் பிடித்துச் செல்கின்றன. சுமார் 3 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சிறுத்தைகள் நுழைந்து நூற்றுக்கும் மேல்பட்ட ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை தாக்கிக் கொன்றுள்ளன. இதையடுத்து, வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்ததையடுத்து, இதுவரை 5 சிறுத்தைகள் பிடிபட்டன.
ஆனால், இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் தொடர்ந்து உள்ளது. கடந்த 24ஆம் தேதி ஊருக்குள் புகுந்த ஒரு சிறுத்தை, நாய் ஒன்றை தூக்கிச் சென்றது, மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (29ஆம் தேதி) ஆட்டைத் தூக்கிச் செல்ல முயலும்போது உரிமையாளர் விரட்டியதையடுத்து ஆட்டை விட்டுவிட்டு சிறுத்தை ஓடிவிட்டது.
இதையடுத்து, வனத்துறையினர் மீண்டும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டில் நாய் ஒன்றை கட்டி வைத்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை (30ஆம் தேதி) இரவு மீண்டும் ஊருக்குள் வந்த சிறுத்தை, கூண்டிலிருந்த நாயைத் தூக்கிச் செல்ல முயன்றபோது கூண்டுக்குள் சிக்கியது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதில் நாய் உயிரிழந்தது.
கூண்டில் சிக்கிய 4 வயது ஆண் சிறுத்தையை முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஜெயராஜ் உத்தரவின் பேரில், வனச்சரகர் இளங்கோ மற்றும் வனத் துறையினர் காரையாறு வனப்பகுதிக்குள்பட்ட உள்ள கவுதலையாறு வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT