கதிராமங்கலத்தில் அமைதி நிலவுகிறது: முதல்வர் பழனிசாமி
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை அமைதியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை அமைதியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஆழ்குழாய் கிணற்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பற்றி சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது, கோவி.செழியன் (திமுக), ராமசாமி (காங்கிரஸ்) ஆகியோர் பேசினர். இதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்:-
கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சுரங்க குத்தகை உரிமத்தின் அடிப்படையில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) குத்தகைக்கு எடுத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த இடத்தில் இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.
கடந்த மே 18-ஆம் தேதியன்று முதல் ஆழ்துளை கிணற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான கருவிகளை அங்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள், பராமரிப்புப் பணிகளை மீத்தேன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் என்று கருதி அந்தப் பணிகளுக்கு கடந்த மே 19 ஆம் தேதியன்று எதிர்ப்பு தெரிவித்து ஓ.என்.ஜி.சி., அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.
கைது செய்யப்பட்டனர்: கடந்த 2-ஆம் தேதியன்று ஓ.என்.ஜி.சி.. நிறுவனம் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியது. இதையறிந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் மற்றும் 9 பேர் பராமரிப்புப் பணிகளைத் தடுக்க முயன்றனர்.
நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட அவர்கள் கடந்த மாதம் 6-ஆம் தேதியன்று ஜாமீனில் வெளிவந்தனர்.
கசிவு இருப்பதாகத் தகவல்: கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் வனதுர்க்கை அமமன் கோவில் அருகே உள்ள தனியார் தரிசு நிலத்தில் செல்லும் எண்ணைய் குழாயில் கசிவு இருப்பதாக ஓ.என்.ஜி.சி., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அதற்குள் கதிராமங்கலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 150 பேர் அந்த இடத்தில் கூடி அதிகாரிகளைத் தடுத்தனர். எரிவாயு குழாய் கிணறு அருகே சாலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் உள்ளிட்ட பொருள்களுக்கு தீ வைத்தனர். அவர்களுள் சிலர் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் காவல் ஆய்வாளர், இரு காவலர்கள், கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்து காவல் துறைக்குச் சொந்தமான வாகனம் சேதமடைந்தது. ஓ.என்.ஜி.சி. சார்பில் எரிவாயு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இப்போது கதிராமங்கலம் கிராமத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை அமைதியாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.