தமிழ்நாடு

கந்தர்வகோட்டை அருகே கண்டறியப்பட்ட சோழர் கால நான்முக சூலக்கல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் அருகேயுள்ள வாழமங்கலத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கீரனூர் சிவன் கோயிலுக்கு தேவதானம் வழங்கியதை உறுதிப்படுத்தும் நான்முக சூலக்கல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியது:
தேவதானம் வழங்கப்பட்ட நிலங்களில் இறை அடையாளங்கள், வழிபாட்டுத்தலங்களுக்கு தானமாக மன்னர்கள் நிலங்களை வழங்கும்போது, அந்நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக வைணவ கோயிலுக்குரிய நிலங்களில் சங்கு, சக்கரம் பொறித்த திருவாழிக்கல்லும், சமணப்பள்ளிக்குரிய நிலங்களில் முக்குடைக்கல்லும், சைவ கோயிலுக்குரிய நிலங்களில் திரிசூலக்கற்களும் நடப்படுவது வழக்கம்.
நில அளவை செய்த சோழர்கள் ராஜராஜன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிலம் அளக்கப்பெற்று நிலத்திற்கு எல்லைக்கற்கள் நடப்பட்டதை கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. அதேபோல, பரகேசரி வர்மன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலும் இந்நடைமுறை பின்பற்றப்பட்டதோடு, ஒருசில கிராமங்களில் ஊரார்களிடம் விவசாய நிலங்கள் பெறப்பட்டு அவை கோயில்களுக்கு வரிநீக்கப்பட்ட இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கோயிலின் தினசரி வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வாழமங்கலம் சூலக்கல்: வாழமங்கலம் கிராமத்தின் வயல்வெளியில் சாய்ந்த நிலையில் உள்ள சூலக்கல்லின் நான்கு பக்கங்களிலும் சூலக்குறிகள் உள்ளன. இரண்டு பக்கத்தில் சூலக்குறியுடன் காளையும் உள்ளது. இது சிவன் கோயிலுக்கு தேவதானம் வழங்கப்பட்ட இடத்தை குறிக்கவே நடப்பட்டிருக்க வேண்டும்.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கி.பி. 1185 - 86 இல் வாளுவமங்கலம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வாழமங்கலம் ஊரவர் சபையினர் கீரனூர் சிவன் கோயிலுக்கு நிலக்கொடை வழங்கிய செய்தி அக்கோயில் கல்வெட்டில் உள்ளது.
மேலும், வாழமங்கலம் பிள்ளையார் கோயில் அருகே சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட துண்டுக்கல்வெட்டில் (குலோ)'த்துங்க சோழ தேவர்க்கு யாண்டு' என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாழமங்கலம் வயலில் கண்டறியப்பட்ட சூலக்கல் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கீரனூர் சிவன் கோயிலுக்கு தேவதானம் வழங்கப்பட்ட இடத்தின் எல்லைக்கல் என்பது உறுதியாகிறது என்றார்.
இந்த கள ஆய்வின்போது தொல்லியல் ஆய்வுக் கழக நிர்வாகிகள் ஆசிரியர்கள் முத்துக்குமார், கஸ்தூரிரங்கன், வாழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் பாண்டியன், சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

வாழமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் எதிரே கிடக்கும் துண்டுக்கல்லில் (குலோ)த்துங்க சோழ தேவர்க்குயாண்டு என்ற வரியுடன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT