விராலிமலை நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 3 பேர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை காலை அரசு நகர பேருந்தும் சொகுசு காரும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை காலை அரசு நகர பேருந்தும் சொகுசு காரும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி தென்னூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் சபியுல்லா (36), சம்சுதீன் மகன் முகமதுகாதர் (32), துல்கருனை மகன் முகமதுபைசல் (34), திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த முகமது இப்ராகிம் மகன் முகமதுமுஸ்தபா (30), சிவகங்கையைச் சேர்ந்த அப்துல்சலாம் மகன் முகமதுகாசிம் (29), ஆகிய 5 பேரும் காரில் குற்றாலம் சென்றுவிட்டு திருச்சி திரும்பிக்கொண்டிருந்தனர். காரை சபியுல்லா ஓட்டியுள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் வந்த கார் திங்கள்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலை, விராலிமலை பிரிவு சாலையருகே வந்த போது கார் தனது கட்டுப்பாட்டை இழந்து, திருச்சியிலிருந்து விராலிமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரபேருந்து மீது மோதியது இதில் பலத்த சாயமடைந்த ஓட்டுநர் சபியுல்லா, முகமது காதர்,முகமது காசிம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த முகமதுபைசல், முகமதுமுஸ்தபா மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணி்ப்பாளர் எஸ். செல்வராஜ், துணைகண்காணி்ப்பாளர் பாலகுரு ஆகியோர் நிகழ்விடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.