தமிழ்நாடு

மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்: மாவட்டம் தோறும் தேவை "ஹெலிபேடு'

கே.விஜயபாஸ்கா்

தமிழகத்தில் கடந்த மாதத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளன. அவசர மருத்துவ உதவிக்கு இந்த ஹெலிகாப்டர்கள் வந்து இறங்க மாவட்டம்தோறும் ஹெலிபேடு அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மருத்துவ சுற்றுலா மையமாக மாறிய தமிழகம்:
இந்தியாவின் மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் உள்ளது. சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து நோயாளிகள் மருத்துவம் பார்க்கின்றனர். பல்வேறு சர்ச்சைகள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பலரும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இதயம், எலும்பு முறிவு, சிறுநீரகம், நுரையீரல் சிகிச்சைகளில் உலகத் தரமான சிகிச்சைகளை அளித்து வருகின்றன.
தமிழகம் மருத்துவச் சேவையில் மிக உயர்ந்த நிலையில் அடைந்துள்ள போதிலும், விபத்து, மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சைகளுக்கு உடனடியாக தனிச் சிறப்பு மருத்துவமனைகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்:
சாலை வழியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றாலும், உரிய நேரத்தில் சென்று சேர முடியாததால், உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், தமிழகத்தில் 2 தனியார் மருத்துவமனைகள் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளன.
அவசர சிகிச்சை மட்டுமல்லாது, இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது இறந்தவரின் உறுப்புகளை, குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த உறுப்பு தேவைப்படும் நபருக்குப் பொருத்தவும் இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும்.
உதாரணமாக, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை, தொலைவிலுள்ள மருத்துவமனையில் உள்ள நபருக்குப் பொருத்த வேண்டும் என்றால், சாலை வழியேதான் கொண்டு செல்ல வேண்டும். அந்த வாகனம் செல்லும் வழியில், போக்குவரத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தால் மட்டுமே நேரத்துக்கு இதயத்தைக் கொண்டு போய் சேர்க்க முடியும்.
இதுபோன்ற சமயங்களில், சாலை வழியாகக் கொண்டு செல்வதைக் காட்டிலும், வான்வழியாகக் கொண்டு செல்வதால் பல்வேறு சிரமங்களைத் தவிர்க்கலாம். மேலும், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மறுவாழ்வளிக்கும்.
மாவட்டம்தோறும் ஹெலிபேடு தேவை:
இப்போது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ள போதிலும், சென்னை அல்லது கோவையில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து செல்லும் ஹெலிகாப்டர்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று அவசர சிகிச்சை தேவைப்படுவோரை அழைத்து வர மாவட்டங்களில் ஹெலிபேடு இல்லை. அப்படியே இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இருக்கும்.
சென்னையில் தனியார் மருத்துவமனை ஹெலிபேடு சேவையைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் கொண்டு வர பரிசீலனை செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கும் முன்பு, மாவட்டம் தோறும் அரசே அதிநவீன ஹெலிபேடுகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சுற்றுலா ஆராய்ச்சியாளர் ஆர்.பிரணவகுமார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், ஹெலிகாப்டரைத் தரையிறக்கப் போதுமான இடம், ஹெலிபேடு போன்ற வசதிகள் பல மாவட்டங்களில் இல்லை. மத்திய அல்லது மாநில அரசு முதல் கட்டமாக மாவட்ட தலைமையிடங்களில் அதிநவீன ஹெலிபேடு அமைக்க வேண்டும். அப்போது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையில் மேலும் சில மருத்துவமனைகள் இணைய வாய்ப்புள்ளது.
மேலும் இந்த மருத்துவமனைகள், மாவட்ட தலைமையிடங்களில் அமைக்கப்படும் ஹெலிபேடுகளில் நிரந்தரமாக ஹெலிகாப்டரை நிறுத்திவைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும். மேலும் பெரு நகரங்களில் உள்ள தனிச்சிறப்பு மருத்துவமனைகள், ஹெலிபேடு உள்ள நகரங்களில் அவசர சிகிச்சைக்கான உதவி மையங்களை அமைக்கவும் வாய்ப்புள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர் போன்ற நகரங்களில் ஹெலிபேடு அமைக்கப்பட்டு, ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தால், இந்த நகரங்களில் இருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அதிகபட்சமாக 1 மணி நேரத்தில் சென்று விடலாம். இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை காப்பற்ற முடியும். முதல் கட்டமாக தமிழக அரசு சோதனை முயற்சியாக இந்த நகரங்களில் ஹெலிபேடு அமைத்து, ஹெலிகாப்டர்களை நிறுத்திவைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT