தமிழ்நாடு

குடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொலை செய்த கணவனும் தற்கொலை

DIN

மனைவியைக் கொலை செய்த கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 14-வது பிளாக்கில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரளா. இவர்களுக்கு மஹாலட்சுமி, அனுசுயா, காவியா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணவனும், மனைவியும் இணைந்து இதே பகுதியில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி வியாபாரம் செய்து வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகனின் நெருங்கிய உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். அவர்களுக்கு மதிய உணவு அளிப்பதில் மோகனுக்கும், சரளாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வந்திருந்த உறவினர்கள் சாப்பிடாமலேயே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்குமிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் உச்சகட்டக் கோபமடைந்த மோகன் சரளாவை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மயக்கமடைந்து சரளா சரிந்து விழுந்துள்ளார். இதன் பிறகு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்துத் திரும்பிய மோகன் மனைவியை எழுப்பியதாகவும், அப்போது சரளா ஏற்கனவே இறந்து போய்விட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் தன்னைத்தானே தாக்கிக் கொண்டு பின்னர் குளியலறைக்குச் சென்று தூக்கிட்டுக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இச்சம்பவங்களையெல்லாம் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த இவர்களது மூத்த மகள் மஹாலட்சுமி, விடிந்த பிறகு அருகில் வசிப்போரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சரளா கொலை செய்யப்பட்டிருப்பதும், மோகன் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மோகன், சரளா ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து எண்ணூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண குடும்பத் தகராறாகத் தொடங்கிய வாக்குவாதம் விபரீதமாக மாறியதைக் கண்டு இப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT