கூட்டத்தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் 'ஜாக்பாட் ட்ரீட்': ஊதியம் இரு மடங்காக உயர்வு!
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார்.அதில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் தற்போதுள்ள ரூ.55 ஆயிரத்திலிருந்து, இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியானது தற்போதுள்ள ரூ.2 கோடியிலிருந்து ரூ 2.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
மேலும் தற்பொழுது ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபப்டும் ஓய்வூதியமானது ரூ 12 ஆயிரத்திலிருந்து ரூ 20 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வானது ஜூலை ஒன்றாம் தேதி முதல்நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்தார்.