அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.
ராமேசுவரம்: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.
கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அப்துல்கலாமின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மணிமண்டபம் திறப்பு விழாவில், முதல்வர் பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு உட்பட ஏராளமான முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.
மணிமண்படத்தில் வைக்கப்பட்டிருக்கும் வீணை வாசிப்பது போன்ற கலாமின் திருவுருவச் சிலையையும், கலாமின் விருதுகளையும் பார்வையிட்டனர்.
அப்துல்கலாமின் நினைவு மணிமண்டபம் திறப்பு விழாவில் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் ராமேசுவரம் தீவு விழாக்கோலம் பூண்டிருந்தது.
அப்துல்கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பேக்கரும்பு கிராமத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள கலாமின் சமாதி முன்பாக பலரும் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் பிரார்த்தனைக் கூடம், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், கலாமின் 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் பெற்ற விருதுகள், கலாம் தொடர்பான ஓவியங்கள் ஆகியன மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.
இம்மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி தனி ராணுவ விமானத்தில் காலை 10 மணிக்கு மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்தில் உள்ள இறங்கு தளத்திற்கு காலை 11 மணிக்கு வந்து இறங்கினார். அங்கிருந்து காலை 11.20-க்கு கார் மூலம் கலாமின் மணிமண்டபத்துக்கு வந்தார்.
மணிமண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் மணிமண்டபத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டனர். நினைவகத்திலிருந்து புதுதில்லி வரை செல்லவுள்ள அப்துல்கலாம்-2020 என்ற அவரது சாதனைப் பிரசார வாகனத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.