இந்தியாவின் அக்னியாகத் திகழ்ந்தவர் கலாம்: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு புகழாரம்!
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியாவின் அக்னியாகத் திகழ்ந்தவர் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்
ராமேசுவரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியாவின் அக்னியாகத் திகழ்ந்தவர் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை திறந்து வைத்தார். மணிமண்டபத்தை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி, அப்துல்கலாமின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த மணிமண்டபத் திறப்பு விழாவில், முதல்வர் பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடு உட்பட ஏராளமான முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவின் காரணமாக ராமேசுவரம் தீவு விழாக்கோலம் பூண்டிருந்தது.
தமிழில் பேசி தனது உரையை துவங்கிய வெங்கய்யா நாயுடு பேசிய விபரங்களாவது:
அப்துல் கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டும் அல்ல; நல்ல மனிதரும் கூட.
ராமேஸ்வரத்தில் துவங்கிய அவரது பயணமானது தில்லி வரை சென்றது. அவரது வாழ்வும் செயலும் பலருக்கும் ஊக்கமூட்டுவதாக இருக்கும்.
இந்த மாநிலத்திற்கு பெருமை சேர்த்த கலாம், ஜெயலலிதா உள்ளிட்ட ஆளுமைகளை நாம் இழந்து விட்டோம்.
இங்கே தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமானது கலாமின் வாழ்வின் பாதையை நமக்கு நினைவூட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் அக்னியாகத் திகழ்ந்தவர் கலாம். அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு அக்னியின் சிறகுகளையும் அவர் வழங்கியுள்ளார்.
எளிமையாக தனது வாழக்கையினைத் துவக்கிய அவர், பெரிய உயரங்களை அடைந்தவர்.
அவர் மறைந்தாலும் அவரது கருத்துக்களின் மூலம் நம்மோடு தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்.
பல்வேறு துறைகளிலும் இந்தியா முன்னேறி உலக அரங்கில் மகத்தான இடம்பிடிக்க பல்வேறு ஆலோசனைகளையும் கலாம் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
நமது நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் அவர்.
இவ்வாறு வெங்கய்யா நாயுடு தன்னுடைய உரையில் தெரிவித்தார்.