கலாம் கனவை நனவாக்குவோம்: மணிமண்டபத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 'வளமான இந்தியா, வல்லரசு இந்தியா' என்ற கனவை நனவாக்க வேண்டுமானால் நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்கள் தங்களின்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 'வளமான இந்தியா, வல்லரசு இந்தியா' என்ற கனவை நனவாக்க வேண்டுமானால் நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
நமது நாடு 2022-இல் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் வளமான இந்தியா உருவாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவாக இருந்தது. அவரின் கனவை நனவாக்க நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தவேண்டும் என்றார் பிரதமர் மோடி.
ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள குடியரசு முன்னா ள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மணிமண்டபத்தை வியாழக்கிழமை திறந்துவைத்த பிரதமர் மோடி, மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
ராமேசுவரத்தில் கலாம் மணி மண்டபத்தை திறந்துவைத்த மோடி, ராமேசுவரம் - அயோத்தி இடையே புதிய ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார்.
மேலும், முகுந்தராயர் சத்திரம் - அரிச்சல் முனை வரையிலான கடற்கரை சாலை திறப்பு, பசுமை ராமேசுவரம் திட்டம், ஆழ்கடல் மீன்பிடித் திட்ட பயனாளிகளுக்கு அனுமதி கடிதத்தை வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியது:
புண்ணிய பூமியான ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே புனிதத் தலம் ராமேசுவரம். அத்தகைய சிறப்புக்குரிய இப்பூமிக்கு பெரும் விஞ்ஞானியும், சிந்தனையாளருமான அப்துல்கலாமின் நினைவகம் மேலும் பெருமை சேர்த்திருக்கிறது. இது ஆன்மிக தலம் மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தர் தனது வெளிநாடு சுற்றுப்பயணத்துக்குப் பிறகு ராமேசுவரத்தில்தான் தனது கால் தடத்தைப் பதித்தார். அத்தகைய பெருமைக்குரியது ராமேசுவரம்.
கலாமின் நினைவைப் போற்றும் வகையில், நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். இப்பணியை மேற்கொள்ள முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு கலாம் உறவினர்கள் மற்றும் தமிழக அரசுடன் பேசி கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சிறப்பான நினைவுச் சின்னத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரு அரசுத் துறை இத்தகைய திட்டத்தை குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மத்திய அரசு இதுபோன்ற திட்டமிட்ட செயல்பாடுகளின் காரணமாக மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை, அதை எப்படி குறிப்பிட்ட காலத்தில் கொண்டு சேர்ப்பது என தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயலாற்றி வருகிறது. அதற்கு உதாரணம்தான் கலாம் நினைவுச் சின்னம். அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. இத்தகைய பெருமையான தருணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்மோடு இல்லாமல் போனதை வருத்தமாக உணருகிறேன். அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், இந்த நினைவுச் சின்னத்தையும், அதற்காக உழைத்தவர்களையும் வெகுவாகப் பாராட்டி இருப்பார்.
மீனவர்கள் பிரச்னை: தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் எல்லை தாண்டிச் சென்றுவிடுவதால் இப் பிரச்னை நேரிடுகிறது. அதற்கு ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் தீர்வு ஏற்படுத்துவதாக இருக்கும். நாட்டில் ஏறத்தாழ 7500 கி.மீ. தொலைவுக்கு கடல் போக்குவரத்தைப் பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கான திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் முன்னேற்றம், அவர்களை தொழில்முனைவோராக உருவாக்குவது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டியவர் கலாம். அவரது கனவை நனவாக்கும் வகையில் புதிய தொழில்கள் உருவாக்கும் திட்டம், உள்நாட்டு பொரு ள்கள் உற்பத்தி, முத்ரா கடன் திட்டம் போன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் செயல்பாடுகளில் மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுவது அவசியம். அந்த வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு துணை நிற்கும்:
தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் 8 லட்சம் குடும்பங்கள் வீடற்றவர்களாக உள்ளனர். தமிழக அரசு உரிய கருத்துரு அனுப்பும் நிலையில், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறவேண்டும் என கலாம் விரும்பினார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும்போது, அவரது கனவு நனவாவது உறுதி. அதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களது பங்களிப்பைத் தர வேண்டும் என்றார் மோடி.