சென்னை சில்க்ஸ் தீ விபத்து: தி.நகர் பகுதி மக்கள் வெளியேற்றம்
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினைத் தொடர்ந்து தி.நகர் பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினைத் தொடர்ந்து தி.நகர் பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை பற்றிய தீ இரண்டாவது நாளாக இன்னும் எரிந்து வருகிறது.
நூற்றுக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்த நிலையில், நேற்று இரவு கட்டடத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை கட்டடத்தின் முன் பகுதி மீண்டும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீ விபத்து காரணமாக தி.நகர் பகுதி முழுவதுமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் நலன் கருதி தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் அப்பகுதியில் வசிப்போர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை சில்க்ஸ் அருகில் வசிப்போர் பெரும்பாலானோர் புகை மூட்டத்தால் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். கட்டடம் இடிந்து விழும் ஆபத்து இருப்பதாலும், தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதும் கட்டடத்தை இடிப்பது குறித்து முடிவு செய்ய இருப்பதாலும், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது என்பதால், அப்பகுதியில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புகை மூட்டத்தால் வீட்டில் தங்களால் இருக்க முடியவில்லை என்றும், தங்களது வீடுகளை விட்டு வெளியே சென்று வரக் கூட தங்களுக்கு கெடுபிடி விதிக்கப்படுவதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். சிலர், சென்னையில் தங்களுக்கு உறவினர்கள் யாருமே இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.