தமிழ்நாடு

அதிவேக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்திய வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்

DIN

சட்ட விரோதமாக பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை பயன்படுத்தியதால் அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகை நகலை பெற்றனர்.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07-ஆம் ஆண்டு கால கட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சென்னை கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்பகம் (எக்ஸ்சேஞ்ச்) நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தில்லி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கில் தொடர்புடைய சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் கே.எஸ்.ரவி, சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கௌதமன் ஆகியோரை கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர்.
இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு தில்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஏப்ரல், மே மாதத்தில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் குற்றப்பத்திரிகை நகலை பெற நேரில் ஆஜராகினர். அப்போது, குற்றப்பத்திரிகை நகல் தயாராகாததால் வழங்கப்படவில்லை. பின்னர், இந்த வழக்கின் விசாரணை ஜூன் 6-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்படி, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை சென்னை 13-ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
அவர்கள் அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்காக, ஜுலை 28-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT