இருண்ட வானம் மழை தருமா? சென்னைவாசிகளின் கேள்விக்கு இங்கே பதில்
வானம் மேக மூட்டத்துடன் இருக்கிறது, அவ்வப்போது தூறலும் போடுகிறது, இது மழையைத் தருமா என்று சென்னைவாசிகள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை: வானம் மேக மூட்டத்துடன் இருக்கிறது, அவ்வப்போது கண்ணுக்கேத் தெரியாமல் தூறலும் போடுகிறது, இது மழையைத் தருமா என்று சென்னைவாசிகள் அவ்வப்போது வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை, கோடை வெயிலில் வெளியே சென்று திரும்புவதற்குள் பொசுங்கிப் போய்விடுவோமோ என்ற நிலை இருந்தது.
ஆனால் தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதன் எதிரொலியாக சென்னையிலும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்தது. இதனால், கோடை வெப்பத்தில் இருந்து ஓரளவுக்கு நிம்மதி கிடைத்தது.
கடந்த மூன்று நாட்களாக, சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேதான் இருக்கிறது. ஆனால் மழை பெய்தபாடில்லை.
இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
இருண்ட வானம்..மேக மூட்டத்துடன் இருக்கிறது. ஆனால் நல்ல மழைக்கு சென்னையில் வாய்ப்பு இல்லை. இந்த மாதிரி வானிலையில் நாம் தூறலை மட்டுமே எதிர் பார்க்க முடியும்.
ஊதா நிறத்தில் உள்ள மழை மேகங்களை பாருங்கள். இது தூறலை மட்டுமே கொடுக்கும். மேலும் அதிகமாக எதிர்பார்த்தோம் என்றால் கொஞ்சம் வேகமான தூறலை மட்டும் எதிர் பார்க்கலாம்.
தூறலை அனுபவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.