சட்டப்பேரவையில் அமளி: திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான விடியோ குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி நீண்ட நேரம் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான விடியோ குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி நீண்ட நேரம் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு பிரச்னையை எழுப்பினார். 'நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான விடியோ குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்' என்று ஸ்டாலின் கோரினார். இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்தார்.
இந்தப் பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் நீங்களே (திமுக) வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். நீதிமன்றத்தில் உள்ள ஒரு பொருள் குறித்து பேரவையில் விவாதிப்பது மரபல்ல. எனவே, நீதிமன்ற முடிவுக்குப் பிறகு பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
பேரவைத் தலைவரின் இந்த முடிவுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த பேரவைத் தலைவர் தனபால், இந்தப் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரே மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே விவாதிக்க முடியாது என மீண்டும் தெரிவித்தார்.
அவரது கருத்தை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமாக எழுந்து தங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பியதுடன் பேரவைத் தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த பிப்ரவரி மாதம் பேரவையில் நடந்த வாக்கெடுப்பு தொடர்பான வழக்குதான் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, இப்போதுள்ள பிரச்னை குறித்து பேரவையில் பேச உரிமை உண்டு என்றார்.
இதனை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் தனபால், இப்போதுள்ள பிரச்னை நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது. எனவே, அதையும் பேச முடியாது என்றார்.
பேரவைத் தலைவரின் இந்த முடிவுக்கு திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால், அவையின் பிற நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை.
ஆனாலும், திமுக உறுப்பினர்களை சமாதானப்படுத்த பேரவைத் தலைவர் பி.தனபால் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க முடியாது என்ற பேரவை விதி எண்ணை சுட்டிக்காட்டி விளக்கினார்.
அப்போது பேரவைத் தலைவரின் பதவி குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ஒரு கருத்தைத் தெரிவித்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் எதிர்ப்புதெரிவித்ததுடன், திமுக உறுப்பினர்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
எந்த சமாதானத்தையும் ஏற்காத திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக உறுப்பினர்களை பேரவைத் தலைவர் பி.தனபால் எச்சரித்தார். தனது உத்தரவுக்கு கட்டுப்பட்டு அமர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.
கூச்சலுக்கு நடுவே ஜி.எஸ்.டி.:
பேரவைத் தலைவர் சமாதானப்படுத்தியும் திமுக உறுப்பினர்கள் அமராத காரணத்தால், கூச்சல், குழப்பங்களுக்கு இடையே அவை நடவடிக்கைகளை பேரவைத் தலைவர் தனபால் தொடர்ந்தார்.
மிக முக்கியமான சரக்கு மற்றும் சேவைகள் வரி(ஜி.எஸ்.டி.) சட்ட மசோதாவை தாக்கல் செய்யும்படி வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியை கேட்டுக் கொண்டார். அவரும் திமுக உறுப்பினர்களின் கூச்சலுக்கு இடையே சட்ட மசோதாவை தாக்கல் செய்து அமர்ந்தார். அப்போது, திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து அந்தக் கட்சி உறுப்பினர்களை அமர வைக்க பேரவைத் தலைவர் தனபால் முயன்றார்.
கூண்டோடு வெளியேற்றம்: இதற்கிடையே, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை தனது துறையின் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்யுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
திமுக உறுப்பினர்களின் எதிர்ப்பால் பேரவையில் 45 நிமிடங்களுக்கும் மேலாக நிலவிய அமளிகளுக்கு நடுவே தனது மானியக் கோரிக்கையை அமைச்சர் சீனிவாசன் தாக்கல் செய்தார். அமைச்சர் தாக்கல் செய்த மானியத்தின் மீது பேசும்படி திமுக உறுப்பினர் உதயசூரியனை பேரவைத் தலைவர் அழைத்தார். ஆனால், அவர் மானியத்தின் மீது பேசாமல் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்புத் தரும்படி கோரினார்.
இதையடுத்து, பேரவைத் தலைவர் பேசுகையில், திமுக உறுப்பினர்களிடம் 45 நிமிடங்களுக்கும் மேலாக மன்றாடி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
எனவே நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்து, பேரவையில் பகுதி ஆறு, ஐந்து, நான்கு ஆகியவற்றில் அமர்ந்திருந்த திமுக உறுப்பினர்களின் பெயர்களை வரிசையாக வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் பெயரையும் வாசித்து முடித்த பிறகு திமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
பேரவைத் தலைவரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.
2 கட்சிகள் வெளிநடப்பு: திமுக உறுப்பினர்களை வெளியேற்றும் பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
திமுகவை வெளியேற்றக் காரணம் என்ன? பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்
திமுகவை வெளியேற்றக் காரணம் என்ன என்பது குறித்து பேரவைத் தலைவர் பி.தனபால் விளக்கம் அளித்தார். பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை புதன்கிழமை வெளியேற்ற உத்தரவிட்ட பிறகு, அவர் பேசியது:-
45 நிமிடங்களுக்கும் மேலாக திமுக உறுப்பினர்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன். பேரவையை நடத்த ஒத்துழைப்பு தருமாறு கோரினேன். நீதிமன்றத்தில் உள்ள ஒரு பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்றனர். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்றேன்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் நீரா ராடியா வழக்கு தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் தங்கமணி பேச முயற்பட்டார். ஒலி நாடாவை (டேப்) ஆதாரமாகக் கொண்டு விவாதிக்க முடியாது என அப்போதைய பேரவைத் தலைவர் மறுத்தார். இப்போதைய பிரச்னையை சம்பந்தப்பட்ட பேரவை உறுப்பினரே மறுத்து விட்டார். நீதிமன்றத்தில் உள்ள ஒரு விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கூடாது என விதி உள்ளது. இதனைப் பொருட்படுத்தாமல் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அவையில் அமளி நடத்தியதையும் கண்டிக்கிறேன். பேரவை அலுவல்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதால் திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டேன் என்றார் பேரவைத் தலைவர் தனபால்.