கக்கன், விஸ்வநாத தாஸ் போன்ற தியாகிகள் நாட்டுக்கு வெளிச்சம் தருவதற்கு திரியாக இருந்து உழைத்தவர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் புகழாரம் சூட்டினார்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பி.கக்கன், விஸ்வநாத தாஸ் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை தக்கர் பாபா கல்வி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், குமரி அனந்தன் பேசியதாவது:
சுதந்திர போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு நாட்டுக்காகப் போராடியவர் கக்கன். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தபோது, தமிழகத்தில் போராட்டத்தைத் தொடங்கியவர் அவர்.
ஆங்கிலேயர்களால் கடும் இன்னலுக்கு ஆளாகி, சிறைக்கு சென்றவர். அரசியலில் பெரும் பதவிகளை வகித்த போதும் எளிமையாக செயல்பட்டவர்.
அதைப்போலவே, தியாகி விஸ்வநாத தாஸ் சிறந்த காந்தியவாதியாக இருந்தார். நாடகங்கள் மூலம் சுதந்திரப் போராட்டங்களை நடத்தியவர். அடமானத்தில் இருந்த அவரது திருமங்கலம் வீட்டை எனது கோரிக்கைக்கிணங்க, அப்போதைய முதல்வர் கருணாநிதி, நினைவுச் சின்னமாக்கியதோடு, சிலை வைக்கவும் உதவினார்.
நாட்டின் வெளிச்சத்துக்கு திரியாக இருந்து கடினமாக உழைத்த நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இளைஞர்கள் மறந்துவிடக்கூடாது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ண மூர்த்தி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைய வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்திய தியாகி விஸ்வநாத தாஸ் 29 முறை சிறை சென்றவர். காந்தியக் கொள்கைகளில் எவ்வித சமரசமும் செய்யாதவர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.