ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் வேட்டை?: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் புகார்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாநில விலங்கான வரையாடுகள் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாநில விலங்கான வரையாடுகள் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர், பொள்ளாச்சி என 2 கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள், பலவகை பறவைகள், மான்கள் என பல்லுயிரிகள் வாழ்கின்றன.
இப்பகுதியில் வன உயிரினங்கள், வன வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இங்குள்ள குழிப்பட்டி, குறுமலை, மாவடப்பு பகுதிகளில் இருந்த பல கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. பல கோடி மதிப்புள்ள 1,500-க்கும் அதிகமான தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. உடுமலை அருகே யானைகள் வேட்டையாடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட வனத் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
வரையாடுகள்: தமிழகத்தின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழ்கின்றன.
களக்காடு முண்டந்துறை, கொடைக்கானல், ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிக்குளம், நெல்லியாம்பதி, பெரியாறு புலிகள் காப்பகம், நீலகிரி, சிறுவாணி அணையை ஒட்டிய பகுதிகள், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் வரையாடுகள் காணப்படுகின்றன.
மனிதர்களின் வேட்டையால் வரையாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மேலும், அழிந்துவரும் வன உயிரினங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால்,இப்பகுதிகளில் வரையாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வரையாடுகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வரையாடுகளை பொதுவாக மனிதர்கள் பார்ப்பது அரிது என்றாலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் சில இடங்களில் அது மனிதர்களை கண்டு அச்சமடைவதில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிலர் சுருக்கு வைத்தும், தாக்கியும் வரையாடுகளை பிடித்துச் செல்வதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் சுரேஷ்குமார் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சந்தன மரங்கள், தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல், வன உயிரினங்கள் வேட்டையாடப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு மர்மச் சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே, தமிழக அரசு ஆனைமலை புலிகள் காப்பகம் மீது தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்றார்.