தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் சரியும் சாகுபடி பரப்பு: இலக்கு 1.32 லட்சம்; இதுவரை 1,501 ஹெக்டேர் மட்டுமே சாகுபடி!

திருநெல்வேலி மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டுக்கு வேளாண்மைத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சாகுபடி இலக்கு 1.32 லட்சம் ஹெக்டேர்.

ஆர். முருகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டுக்கு வேளாண்மைத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சாகுபடி இலக்கு 1.32 லட்சம் ஹெக்டேர். ஆனால், பருவமழை பொய்த்து தொடக்கமே சுணக்கம் என்ற நிலையில் இதுவரை 1,501 ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடி பரப்பைக் கூட எட்ட முடியவில்லை என்ற விரக்தியில் உள்ளனர் விவசாயிகள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளின் மூலம் சராசரியாக 2.55 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வந்தன. தாமிரவருணி பாசனத்தில் தொடக்கத்தில் ஆண்டுக்கு சராசரியாக 1093 மி.மீ. மழை கிடைத்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக 814.80 மி.மீ. என சுருங்கி விட்டது. இப்போது, பருவமழை பொய்த்து சாகுபடி பரப்பு தொடர்ந்து சுருங்கி வருகிறது. 11 அணைகளில் சேர்த்து 5 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த மாதம் 7.92 மி.மீ. மட்டுமே மழை பெறப்பட்டுள்ளது. நிகழாண்டு இதுவரை 243.71 மி.மீ. மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது இயல்பைவிட பெருமளவு குறைவு.

முப்பருவம்: தாமிரவருணி பாசனத்தில் வழக்கமாக கார், பிசானம், கோடை ஆகிய மூன்று பருவங்களுக்கும் சாகுபடி நடைபெறுவது வழக்கம். 11 அணைகள் அமைந்துள்ள ஆயக்கட்டுப் பகுதிகள், தாமிரவருணி நதிக்கரையோரப் பகுதிகளில் கார், பிசானம் தவிர்த்து கோடையிலும் ஒரு போகம் சாகுபடி செய்வது வழக்கமாக இருந்து வந்தது. மேலும், முன்கார் பருவம் (பழந்தொழி) என்ற அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம், மணிமுத்தாறு படுகைகளில் பிசான பருவ அறுவடை முடிந்ததும் முன்கார் பருவ சாகுபடி நடைபெறும். கடந்தாண்டு கேள்விக்குறியான இந்த பருவ சாகுபடிகள், இப்போது தொடக்கத்திலேயே மிகவும் குன்றிய நிலையில் காணப்படுகிறது.

சாகுபடி இலக்கு: திருநெல்வேலி மாவட்டத்தில் 2017-18ஆம் ஆண்டுக்கு கார் பருவத்தில் 23,400 ஹெக்டேர், பிசானப் பருவத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர், கோடைப் பருவத்தில் 4 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் 72 ஆயிரத்து 400 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 13,100 ஹெக்டேரில் சிறுதானியங்கள், 35,300 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்கள் , 4 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி, 3 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு, 4,310 ஹெக்டேரில் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 310 ஹெக்டேர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பருவமழை பொய்த்துவிட்டதாலும், அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து பாசனத்துக்கு வழியில்லாததாலும் கார் பருவத்துக்கான நெல் சாகுபடி இதுவரை 341 ஹெக்டேரில் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதுதவிர, 162 ஹெக்டேரில் சிறுதானியங்கள், 224 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்கள், 371 ஹெக்டேரில் பருத்தி, 154 ஹெக்டேரில் கரும்பு, 249 ஹெக்டேரில் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 1,501 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது.

கடந்தாண்டு சாகுபடி: கடந்தாண்டும் இதேபோல மழை கை கொடுக்காத நிலையிலும், அணைகளில் இருந்த இருப்பு, கால்வாய் பாசனம், கிணற்றுப் பாசனங்களால் 4,529 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதர பயிர் வகைகளயும் சேர்த்து கடந்தாண்டு இதே காலத்தில் (2016 ஜூன்) 9,175 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த இலக்கை கூட இதுவரை எய்த முடியவில்லை என்பது விவசாயிகளை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி. வேலுமயில் கூறியது:
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போன்று, சாகுபடி இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்கினால் மட்டுமே சாகுபடி பரப்பு இலக்கை எய்த முடியும். மழையில்லை என்பதால் வங்கிகளில் கடன் பெற்று ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர் விவசாயிகள். ஆனால், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் பொய்த்து கடன்சுமை மட்டுமே அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து விவசாயிகள் பெற்ற அனைத்து வகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்வதுடன், உரிய விலை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே சாகுபடி சாத்தியமாகும் என்றார் அவர்.

403 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு!
திருநெல்வேலி மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜ் கூறியது: பருவமழை பொய்த்து வந்தாலும் கிடைக்கும் மழை மற்றும் இப்போதைய நீராதாரங்களைப் பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதவிடும் வகையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், வேளாண் விற்பனை நிலையங்கள், இடுபொருள் விற்பனை நிலையங்களில் 403 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதில், 339 மெட்ரிக் டன்னுக்கு நெல் விதைகள் இருப்பு உள்ளது. பயறு வகைகளில் 58 மெட்ரிக் டன் விதைகள் கையிருப்பு உள்ளது. இவை தவிர, 2,419 மெட்ரிக் டன் யூரியா, 1,899 மெட்ரிக் டன் டிஏபி, 1,565 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,567 மெட்ரிக் டன் கூட்டு உரங்கள், 2,108 மெட்ரிக் டன் கலப்பு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உயிர் உரங்களில் 1,560 மெட்ரிக் டன் அசோஸ்பைரில்லம், 2,010 மெட்ரிக் டன் பாஸ்போ பாக்டீரியா, 3,042 மெட்ரிக் டன் ரைசோபியம் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சாகுபடியை தொடங்கும் விவசாயிகளுக்காக இவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT