கடலூர் அருகே முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்
கடலூர் அருகே தொடர்ந்து இரு நாட்களாக முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்து திருடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெய்வேலி: கடலூர் அருகே தொடர்ந்து இரு நாட்களாக முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்து திருடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் அடுத்துள்ள மருதாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன் (55). விவசாயி. இவருடைய மனைவி தேவா (50). செவ்வாய்க்கிழமை பாலக்கிருஷ்ணன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். வீட்டில் தேவா மட்டும் தனியாக இருந்தார். நள்ளிரவில் கடப்பாறையால் கதவை உடைத்து உள்ளேப் புகுந்த 2 கொள்ளையர்கள், தேவாவை எழுப்பி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கத்தினால், கொலை செய்து விடுவதாக கொள்ளையர்கள் மிரட்டியதால் தேவா அமைதியாக இருந்துள்ளார்.
அவரது வீட்டில் இருந்து 50 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதேப் போல திங்கட்கிழமை இரவு சித்தரசூர் கிராமத்துக்குள் புகுந்த 6 முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்த இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
நெல்லிக்குப்பம் காவல் சரகப் பகுதியில் 2வது நாளாகவும் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம் தொடர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.