தமிழ்நாடு

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு விநியோகம்: நாள் தோறும் 10 லட்சம் பேருக்கு வழங்கப்படும்

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டக் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வரும் சனிக்கிழமை (ஏப்.1) முதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ். பாண்டியன்

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டக் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வரும் சனிக்கிழமை (ஏப்.1) முதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமான அட்டைகளுக்குப் பதிலாக...: தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் (ரேஷன் அட்டைகள்) பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் உள்தாள் ஓட்டி கால நீட்டிப்பு செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.
ரூ.320 கோடியில்...: குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு வடிவில் அமைக்க ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆதார் அட்டையிலிருந்து இணைக்க வசதியாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் சிறிய ஸ்கேனிங் கருவி வழங்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக ஆதார் விவரங்கள் குடும்ப அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு...: குடும்ப அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு அவற்றை விநியோகிக்கும் நிலை எட்டப்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.
பழைய அட்டையைப் பெற்றுக் கொண்டு...: சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் வருவாய் வட்ட வாரியாக நான்கு அல்லது ஐந்து மையங்கள் அமைத்து, அங்கு பொதுமக்களை வரவழைத்து பழைய குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொண்டு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பணியில் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பதிவு செய்த பிறகு...: புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பெற்றதும் தங்களுக்கு உரிய நியாயவிலைக் கடைக்குச் சென்று குடும்ப அட்டைதாரர் அளித்து கருவியில் ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவு செய்த பிறகு தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்மார்ட் கார்டின் சாதகம்: ஸ்மார்ட் கார்டை நியாயவிலைக் கடையில் உள்ள கருவி முன் காட்டும் நிலையில், குடும்ப அட்டைதாரருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பொருள்கள் வாங்கியது குறித்த தகவல் உடனடியாக குடும்ப அட்டைதாரரின் செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். பொருள்கள் வாங்கும்போது இனி ரசீது வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெயர் சேர்த்தல்-நீக்கல் எப்போது?
குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் செய்யும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வடிவிலான அட்டை அளிக்கப்பட்ட பிறகே இந்தப் பணிகள் மீண்டும் தொடங்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1 முதல் அளிக்கப்பட உள்ளன. கடந்த ஒரு வாரமாக குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முகவரி மாற்றம், பெயர் நீக்கல், சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்து கணினி மயமாக்கல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் எண் இணைப்பு: ஆதார் எண் இணைப்புப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முகவரி மாற்றத்தின் காரணமாக, ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு குடும்ப அட்டையை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால், ஆதார் எண்ணையும் புதிய கடையுடன் இணைக்க வேண்டும். இந்தப் பணிகளும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் முதல் வாரம்: குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வது, ஆதார் எண் இணைப்பு, ஆதார் எண்ணை வேறு கடைக்கு மாற்றுவது உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் அனைத்தும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து தொடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT