இனி 'அதிமுக அம்மா சசிகலா அணி' உறுப்பினர்கள் என அழைக்க வேண்டும்: புதுச்சேரி பேரவையில் சலசலப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா அணி என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம், ஓபிஎஸ் அணியைச் சேர்ந் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வியாழ
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா அணி என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம், ஓபிஎஸ் அணியைச் சேர்ந் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வியாழக்கிழமை மனு அளித்தார்.
தமிழகத்தில் அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. தேர்தல் ஆணையம், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்து உத்தரவிட்டது. மேலும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என அக்கட்சியினர் இரு பிரிவாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா என 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதற்கிடையே புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் 30, 31 ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.
பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடைபெறும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலைச் சினனத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஓபிஎஸ் அணி அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி எனவும், சசிகலா அணியை அதிமுக அம்மா அணி எனவும் பேரை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. எனவே புதுச்சேரி சட்டப்பேரவையிலும் அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை தாங்கள் பேச அழைக்கும் முன்னரோ வெட்டுப் பிரேரணை தாக்கல் முன்மொழியும் போதோ அதிமுக அம்மா சசிகலா அணி உறுப்பினர்கள் என அழைக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவுடன் தேர்தல் ஆணையத்தின் கடித நகலையும் இணைந்திருந்தார். பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பு ஓம்சக்தி சேகர் வந்து கோரிக்கை மனு அளித்ததால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.