முகப்பு
தமிழ்நாடு

கூடலூரில் யானைகள் நடமாட்டத்தை எச்சரிக்கும் சிவப்பு விளக்கு கோபுரங்கள்!

வால்பாறையைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பொதுமக்களுக்கு யானைகள் நடமாட்டத்தை எச்சரிக்கக் கூடிய சிவப்பு விளக்கு கோபுரங்கள்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
கூடலூரில் உள்ள தனியார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் யானைகள் நடமாட்டத்தை எச்சரிக்க அமைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற கோபுர விளக்கு குறித்து பேசுகிறார் இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் யானைகள் ஆராய்ச்சியாளர்
பகிர்:

வால்பாறையைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பொதுமக்களுக்கு யானைகள் நடமாட்டத்தை எச்சரிக்கக் கூடிய சிவப்பு விளக்கு கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சிவப்பு விளக்கு கோபுரங்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று இயற்கை பாதுகாப்பு நிறுவனம்(Nature Conservation Foundation) அமைத்துக்கொடுத்துள்ளது. இந்தத் தனியார் தேயிலைத் தோட்டத்தை சுற்றி 7 சிவப்பு விளக்கு கோபுரங்கள் கூடலூரில் யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்யும்.
வால்பாறையில் யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு பொதுமக்களின் செல்லிடப்பேசி எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. இந்த எச்சரிக்கையின் மூலமாக வால்பாறையில் யானை தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
எஸ்.எம்.எஸ். மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பணியை இயற்கைப் பாதுகாப்பு அமைப்பும்(Nature Conservation Foundation) தமிழக வனத்துறையினரும் செய்து வருகின்றனர்.
சிவப்பு நிற கோபுர விளக்கு: வால்பாறை தேயிலைத் தோட்ட நிறுவனத்தாருடன் இணைந்து 24 இடங்களில் சிவப்பு நிற எல்.ஈ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் உள்ள முக்கியமான நபர்களுக்கு இதை இயக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டத்தின் தகவல் தெரிந்த பின், செல்லிடப்பேசி மூலம் பிரத்யேக எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கப்படும். மிஸ்டு கால் கொடுக்கப்பட்டதும் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற எல்.ஈ.டி. விளக்கு ஒளிரத் தொடங்கும். இந்த விளக்கினைக் கண்டு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்தத் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, கூடலூரில் இருக்கும் பாரி அக்ரோ (Parry Agro) எனும் நிறுவனம் தங்கள் தோட்டப் பகுதிகளில் யானை தாக்குதலை தடுக்க இந்த சிவப்பு நிற கோபுர விளக்கு திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டது.
இது குறித்து தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின், யானைகள் ஆராய்ச்சியாளர், ஆனந்த குமார் கூறியது: யானைகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டக் காடுகளை இரவு அல்லது அதிகாலையில் கடக்கும். தேயிலைத் தோட்டப் பாதைகள் பெரும்பாலும் நடப்பதற்கு சிரமமானவை. எனவே யானைகள் எஸ்டேட் சாலைகளைக் கடந்து செல்லும். இதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
இதனை உணர்ந்துக்கொண்டு கூடலூரில் இருக்கும் பாரி ஆக்ரோ நிறுவனம் எங்களை தொடர்பு கொண்டது. வால்பாறையில் இருப்பது போன்ற எச்சரிக்கை கோபுரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து. இப்போது கூடலூரில் 7 கோபுரங்கள் அமைப்பதற்கான செலவை நிறுவனமே ஏற்றுக்கொண்டு அமைத்துள்ளது. எங்களது நிறுவனம் சார்பாக தொழில்நுட்ப உதவியை மட்டுமே கொடுத்துள்ளோம். அதாவது, யானையை கண்டால் செல்லிடப்பேசி மூலம் எப்படி சிவப்பு விளக்கு கோபுரத்தை ஒளிரச்செய்வது என்ற பயிற்சியை கொடுத்துள்ளோம். இதுபோன்ற பல தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் இதனை செயல்படுத்த வேண்டும் என்றார் ஆனந்த குமார்.

கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கருவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments